யாழ் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவு!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைந்ததாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். அடுத்த கட்ட தடுப்பூசிகள் வார இறுதியில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது எனவே ஏற்கெனவே தடுப்பூசி வழங்க தயாராக இருந்த கிராம சேவகர் பிரிவுகளில் நாளைய தினம் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது எனவும் அந்த குறித்த பகுதி மக்களுக்கான தடுப்பூசிகள் இரண்டாம் கட்ட தடுப்பூசி வந்தவுடன் குறித்த நிகழ்ச்சி நிரலின் படி தடுப்பூசி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

எனவே இந்த விடயம் தொடர்பில் பொது மக்கள் குழப்பமடைய தேவையில்லை எனவும் எதிர்வரும் வாரமளவில் யாழ் மாவட்டத்திற்கு அரசினால் அடுத்த கட்ட தடுப்பூசி வழங்கப்படும் போது ஏற்கனவே சுகாதாரப் பிரிவினர் தடுப்பூசி வழங்கல் தொடர்பில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் படி தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.

மேலும் ஏற்கனவே யாழ் மாவட்டத்திற்கு 50ஆயிரம் தடுப்பூசிகள் அரசினால் வழங்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து இன்று வரை அந்த தடுப்பூசிகள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு இன்றுடன் தடுப்பூசி நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்தகட்ட தடுப்பூசி கிடைத்தவுடன் ஏனைய மக்களுக்கு வழங்கப்படும்.

குறிப்பாக நேற்று மாலையுடன் 32 ஆயிரம் தடுப்பூசிகள் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் மிகுதி தடுப்பூசியும் நிறைவடைந்துள்ளது எனினும் இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பணியாளர்கள் மற்றும் 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என எதிர்பார்த்து இருந்த போதிலும் கூடுதலான மக்கள் ஆர்வம் காட்டி தடுப்பூசியை பெற்றதன் காரணமாக இன்று மதியத்துடன் குறித்த தடுப்பூசிகள் அனைத்தும் மாவட்டத்தில் நிறைவடைந்து உள்ளதாகவும் தெரிவித்தார். எதிர்வரும் திங்கட்கிழமை ஒரு மில்லியன் தடுப்பூசிகள் அரசினால் நாட்டிற்கு எடுத்து வரப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்