மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 4 பொலிஸ் நிலையங்கள்!

ஏ.எச்.ஏ. ஹுஸைன் , எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 4 பொலிஸ் நிலையங்கள் புதிதாக உருவாக்கப்படவுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் புணாணை சந்திவெளி கொக்குவில் கர்பலா ஆகிய இடங்களிலேலே இந்தப் புதிய பொலிஸ் நிலையங்கள் இயங்கவுள்ளன.

புதிய பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கான அனுமதியை பொலிஸ் மா அதிபர் வழங்கியதையடுத்து, புதிய பொலிஸ் நிலையங்களை அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் நிலையங்கள் இயங்கிவருகின்றன. அதற்கும் மேலதிகமாக, இந்த நான்கு புதிய பொலிஸ் நிலையங்களும் பொது மக்களின் நன்மை கருதி இம்மாத இறுதிக்குள் திறக்கப்பட்டு, பொலிஸ் சேவைகளைத் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும் வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் கீழ் புணாணை எனுமிடத்தில் தற்போது இயங்கி வரும் பொலிஸ் சோதனைச் சாவடி புணானை பொலிஸ் நிலையமாகவும், தற்போது ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் இயங்கி வரும் சந்திவெளி கோரகல்லிமடு பொலிஸ் சோதனைச் சாவடி சந்திவெளி பொலிஸ் நிலையமாகவும், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் கொக்குவில் பொலிஸ் சோதனைச் சாவடியாக இயங்கிவரும் சோதனைச்சாவடி கொக்குவில் பொலிஸ் நிலையமாகவும், காத்தான்குடி பொலிஸ் பிரிவில்  இயங்கி வரும் கர்பலா பொலிஸ் சோதனைச் சாவடி கர்பலா பிரதேச பொலிஸ் நிலையமாகவும் இயங்கவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்