மாகாண சபைகளின் அதிகாரத்தை பிடுங்கி வெற்றுப்பொருளாக்குவதே அரசின் திட்டம் – சிவசக்தி ஆனந்தன்

மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பிடுங்கி வெற்றுப்பொருளாக்குவதே அரசின் திட்டம் அமைச்சரவைத் தீர்மானங்கள் அம்பலப்படுத்துவதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு

உயிர்த்தியாகங்களினால் உருவான மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு மறுதலித்து வரும் சிங்கள, பேரினவாத அரசுகள் தற்போது மருத்துவம் மற்றும் கல்வி அதிகாரங்களையும் பறிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக மாகாண சபைகளை அதிகாரங்கள் அற்ற வெற்றுப்பொருட்களாக்குவதையே இலக்காக கொண்டவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைகள் உட்பட ஒன்பது மருத்துவ மனைகளை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு அனுமதி அளிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழன விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய இளைஞர், யுவதிகளின் உயிர்த்தியாகத்தினால் உருவானது தான் இந்திய இலங்கை ஒப்பந்தமும் அதன் பிரகாரம் இலங்கை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தமும் ஆகும்.

அதன் மூலம் தான் மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன. இதில் வடக்கு கிழக்கில் பூர்வீகமாக வாழும் தமிழ் மக்களுக்காக இணைந்த வடகிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டிருந்தது என்பதே வரலாறு.

இந்த நிலையில் ஆரம்பத்தில் வடக்கு கிழக்கு மாகாண சபை பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் மாகாண சபைகளுக்கு காணப்பட்ட அதிகாரங்களின் பிரகாரம் காணி, பொலிஸ் ஆகியவற்றை வழங்குவதற்கு மத்தியில் மாறிமாறி ஆட்சியில் இருந்த அத்தனை சிங்கள பேரினவாத அரசாங்கங்களும் மறுத்தன.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் தனிநாடு உருவாகும் என்றும், அது இலங்கைத் தேசிய பாதுகாப்புக்கு கேடாகிவிடும் என்றும் சிங்களத் தலைவர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள்.
இவ்விதமான நிலைமை தற்போதைய ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்ததும் மேலும் மோசமடைந்தது. ஒரேநாடு ஒரே சட்டம் என்ற சித்தாந்தத்தினை அமுலாக்கி 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக துடைத்தெறிவதற்கு கங்கணங்கட்டிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனாலும், பிராந்திய தலைமை நாடு உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நெருக்கடியால் அதனை உடனடியாக தற்போதைய ஆட்சியாளர்களால் மேற்கொள்ள முடிந்திருக்கவில்லை. இதனால் தான் 13ஆவது திருத்தச்சட்டத்தினை காலவதியாகியசட்டமென்று விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அதில் ஆகக்குறைந்தது மாற்றங்களை ஏற்படுத்தி வலுவிழந்தவொன்றாக உருவாக்கி விடுவதற்கும் முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் தான் தற்போது மாகாண சபைகளின் அதிகாரத்திற்கு உட்பட்டிருக்கும் மருத்துவ மனைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அடுத்துவரும் நாட்களில் பல பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தல் என்ற பெயரில் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு திரைமறைவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கு கொரோனா நெருக்கடி, இணைவழிக்கல்வி போன்ற இதர விடயங்களையும் தமக்கான சாதமான நிலைமைகளாக மாற்றிக்கொள்வதற்கு ஆட்சியாளர்கள் முனைந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஏற்கனவே காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கவதற்கு மறுத்துவரும் ஆட்சியாளர்கள் சுகாதாரம், கல்வி ஆகிய விடயங்களில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களையும் பிடுங்கி விட்டால் மாகாண சபைகள் அனைத்து வெற்றுப்பொருட்களாகி விடும்.

அதன் பின்னர் மாகாண சபைகளினால் எவ்விதமான பயன்பளும் ஏற்படப்போவதில்லை. அவ்வாறு ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் ஏற்பட்டாலும் ஆளுநர் உள்ளிட்ட அரச தரப்பினரை வைத்து சமாளித்து விடலாம் என்றே கருகின்றது.

இதனால், தான் மூன்று ஆண்டுகளுக்கு அதிகமான காலம் கடந்துள்ள போதும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாது இழுத்தடிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இத்தகைய பின்னியில் மாகாண சபைகள் எவ்விதமான அதிகாரங்களையும் பயன்படுத்தாது இருக்கின்றபோது, அதனால் எவ்விதமான பயனுமில்லை என்று கூறி முழுமையாக 13ஆவது திருத்தச்சட்டத்தினை அகற்றுவதே திட்டமாக உள்ளது.

எனவே இந்த விடயத்தில் பங்கு தாரர்களாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகள், சிவில் தலைவர்கள், மதத்தலைவர்கள் என்று அனைவரையும் உள்ளடக்கிய முiறாயான பொறிமுறையொன்றை முன்னெடுப்பதே சிறந்ததாகும் என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்