தடுப்பூசிகள் வழங்கலில் பின்னடைவிற்கான காரணம் அதிகாரிகளின் அசமந்த போக்கே என சில அரசியல்வாதிகள் தெரிவித்த கருத்து விஞ்ஞான ரீதியான அறிவற்ற எழுந்தமானவை

[வி.சுகிர்தகுமார் ]

  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையான 13 சுகாதார சேவைகள் பணிமனையினாலும் சிறந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான சகல உதவிகளையும் வளங்களையும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார். இதன் மூலம் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களுக்கு நாங்கள் தயாராகவுள்ளோம்.  என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்தார்.
தடுப்பூசி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்
இலங்கையில் உள்ள 25 பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலும் ஒப்பீட்டளவில் தடுப்பு நடவடிக்கையில் முதலிடத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உள்ளது. இதனை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த ஒரே ஒரு காரணமே எமக்கான தடுப்பூசி வருவதற்கு தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சின் கீழ் இயங்கிவரும் தொற்று நோய்ப்பிரிவு தொற்று அபாயம் கூடிய பிரதேசங்களுக்கு முன்னுரிமை அழித்து தடுப்பூசியை வழங்கி வருகின்றது. அவ்வாறு பார்க்கையில் எமது பிராந்தியத்தில் மிகுந்த அபாயம் மிகக்குறைவாக காணப்படுகின்றது. இதனாலேயே தடுப்பூசி கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆயினும் எமக்கு தேவையான தடுப்பூசி தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு தொலைபேசியிலும் உரையாடியுள்ளேன். இதன் அடிப்படையில் அடுத்த முறை வருகின்ற தடுப்பூசி தொகுதியிலிருந்து நிச்சயமாக நமது பிராந்தியத்திற்கும் வழங்கப்படும் என அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

இந்நிலையில் சில அரசியல்வாதிகள் சில முகநூலில் இடம்பெற்ற நேர்காணலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாக தடுப்பூசிகள் வழங்கலில் பின்னடைவு காணப்படுவதாக கூறியுள்ளனர்.

இக்கருத்து எந்த விதத்திலும் விஞ்ஞான ரீதியான அறிவற்ற முறையில் எழுந்தமானமாக தெரிவித்த கருத்து. அரச உத்தியோகத்தர்கள் புண்படும் விதமான கருத்து.

கடந்த ஒன்றரை வருடகாலமாக அர்ப்பணிப்போடு சுகாதார அதிகாரிகள் யாவரும் சிறப்பாக செயற்பட்டதன் விளைவே நோயாளர் எண்ணி;;க்கை மற்றும் மரணவீதங்கள் நமது பிராந்தியத்தில் குறைந்தமைக்கான காரணம்.  அந்த ஒரே ஒரு காரணமே எமக்கான தடுப்பூசி வருவதற்கு தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அவர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன் என்றார்.

ஆகவே எவர் எதைக் கூறினாலும் எமது நடவடிக்கைகள் சீரான முறையில் நேர்த்தியான முறையில் எவ்வித பாகுபாடுமின்றி மக்களை பாதுகாக்கும் வண்ணம் தொடரும் என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.