இறந்த மகளின் பூதவுடலை எங்களிடம் தாருங்கள் : ஒப்பரியுடன் கண்ணீர் மல்க தாய் வேண்டுகோள்
[நூருள் ஹுதா உமர்]
காரைதீவில் கடந்த வெள்ளிக்கிழமை (18) அன்று தற்கொலை செய்து மரணித்த சுகுமார் டினேகா (வயது 17)வின் பூதவுடலை குடும்பத்தாரிடம் கையளிக்க அரசும் நீதித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பட்டமொன்றை மரணித்த சுகுமார் டினேகாவின் குடும்பத்தினர் மற்றும் உறவுகள் இன்று (22) மாலை இறந்தவரின் வீட்டுக்கு முன்னால் மேற்கொண்டனர்.
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிரில், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எஸ். சசிகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அரசாங்கம் முன்வைத்துள்ள மரண சட்டத்திட்டங்கள் மீறப்பட்டு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அவர்களின் அறிவித்தல்கள் புறக்கணிக்கப்பட்டு இந்த பூதவுடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்காமல் தொடர்ந்தும் இழுபறி நிலை உள்ளதாகவும் இதன் மூலம் இந்து சமய சடங்குகள் எதுவும் செய்யமுடியாது உள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த இறந்தவரின் தாயார் மற்றும் தாயின் தாயார் ஆகியோர் தங்களின் மகளை நல்லடக்கம் செய்ய பூதவுடலை கையளிக்குமாறும் அதன் பின்னர் விசாரணைகளை மேற்கொண்டு நடத்துமாறும் நீதிபதி அவர்கள் மனிதாபிமானத்துடன் இதுதொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒப்பரியுடன் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டனர். தற்கொலை செய்து இறந்த சுகுமார் டினேகாவின் பூதவுடல் மரண விசாரணைகளுக்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை