அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நாவலப்பிட்டியில் போராட்டம்
(க.கிஷாந்தன்)
மக்கள் விடுதலை முன்னணியால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் ஓர் அங்கமாக நாவலப்பிட்டிய நகரிலும் இன்று (30.06.2021) எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
எரிபொருட்களின் விலையைக் குறைக்குமாறும், விவசாயிகளுக்கு உரம் வழங்குமாறும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியே இப்போராட்டம் இடம்பெற்றது.
” கொரோனாப்பிரச்சினை, பயணக்கட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்களால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மரத்தில் இருந்து விழுந்தனை மாடுமுட்டுவதுபோல எரிபொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மென்மேலும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர். எனவே, மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படவேண்டும்.
அதேபோல எவ்வித மாற்று ஏற்பாடுகளும் இன்றி இரசாயன உரப்பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. விளைச்சல்களும் அழிவடைந்துவருகின்றன. எனவே, உரத்தை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.” – என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
ஜே.வி.பியன் செயற்பாட்டாளர்களும், மக்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை