மருதமுனை ஜம்இய்யத்துல் உலமா அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனம் விடுக்கும் அவசர வேண்டுகோள்.

(றாசிக் நபாயிஸ்)
கொவிட் தொற்று அபாய சூழ்நிலையும் அதனால் பாதிப்புறுவோரின் எண்ணிக்கையும்  மருதமுனைப் பிரதேசத்தில் மிக வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில் அது குறித்த சுகாதார வழிகாட்டல்கள் தொடர்ந்தும் பின்பற்றப்படாமல் கவனயீனமாக விடப்படுமானால் மருதமுனையை முழுமையாக முடக்கும் நிலைமை தோன்றலாம் என சுகாதாரப் பிரிவினர் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள இக்கட்டான சூழ்நிலையில் மருதமுனை ஜம்இய்யத்துல் உலமா அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனம், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி, மருதமுனை வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி மற்றும் பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சென்ற 2021.06.28யில் ஒன்றுகூடி மேற்கொண்ட தீர்மானங்களுக்கமைய கீழ்வரும் வழிகாட்டும் ஆலோசனைகள் முன்வைக்கின்றன.
01.கொவிட் தொற்றுக்குள்ளாகி உரிய சிகிச்சைகளைப் பெறாமல் இறுதி நேரங்களில் வைத்திய உதவியை நாடுவோரில் அதிகமானோர் மரணிக்கும் நிலை உருவாகியுள்ளமையை  கவனத்திற்கொண்டு தொற்றுக்குள்ளானவர்கள் அல்லது தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளவர்கள் ஓடி ஒளிந்துகொள்ளாமல் தாமாகவே முன்வந்து சுகாதாரப் பிரிவினருக்குத் தெரியப்படுத்தி பூரண ஒத்துழைப்பை நல்குதல்.
02.ஜனாஸா வீடுகள் கொவிட் கொத்தணிகளாக மாறுகின்ற ஒரு சூழ்நிலை அவதானிக்கப்படுவதனால் ஜனாஸா வீடுகளில் ஒன்றுகூடல்களை தவிர்ந்துகொள்வதோடு கலந்துகொள்வோரின் எண்ணிக்கையை 15 பேருக்குள் மட்டுப்படுத்தி பொருத்தமான சுற்றுநிருபங்களுக்கு அமைவாக மிக விரைவாக மையித்துக்களை நல்லடக்கம் செய்வதற்கு ஆவனசெய்வதோடு இது தொடர்பான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரிமாறுவதை முற்றாக தவிர்ந்து கொள்ளுதல். ஜனாஸா வீடுகளில் மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையைவிட அதிகமானோர் அனுமதிக்கப்படுவார்கள் எனின் குறித்த ஜனாஸா வைக்கப்பட்டுள்ள வீட்டின் உரிமையாளருக்கு எதிராக உரிய தரப்பினரால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு சுகாதாரத்தரப்பினரால் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
03.திருமணம் தொடர்பான  நிகழ்வுகளுக்கும் வழமையான ஒன்றுகூடல்களை ஏற்பாடு செய்யாமல் திருமண நிகழ்வில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கையை கட்டாயம் வரையறுத்துக்கொள்ளல்.
04.கடற்கரை, கடைத்தெருக்கள், பொது இடங்களில் ஒன்றுகூடுவதையும் குடும்பரீதியிலான, நட்பு வட்டார ஒன்றுகூடல்களையும் முற்றாகத் தவிர்ந்துகொள்வதோடு அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டால் சுகாதார வழிமுறைகளை மிக இறுக்கமாக பின்பற்றல்.
பெண்கள், தாய்மார்கள் இதுவிடயத்தில் அலட்சியமாக நடந்து கொள்வதாக பரவலாக அவதானிக்கப்படுவதால் இது விடயத்தில் இவர்கள் சுகாதார வழிமுறைகளை பூரணமாகப் பின்பற்றி பொறுப்பாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தவறும் பட்சத்தில்  சுகாதார, பாதுகாப்புப் பிரிவினரின் கெடுபிடிகளுக்கு உள்ளாக நேரிடலாம் என்பதை எச்சரிக்கின்றோம்.
05.வெளிப் பிரதேசங்களில் இருந்து மருதமுனைப் பிரதேசத்துக்கு தொழில், வியாபார நிமித்தம் வருகைதருகின்ற இனங்காணப்படாத நபர்களுடனான தொடர்பாடலை முற்றுமுழுதாக தவிர்ந்துகொள்வதோடு அவர்கள் தொடர்பில் சுகாதாரப் பிரிவினருக்கு தெரியப்படுத்தல்.
06.பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தனியார் வகுப்புக்கள் சட்டவிரோதமான முறையில் குறிப்பிட்ட சில வீடுகளில் நடாத்தப்படுவதனால் அவ்வீடுகள் சுகாதாரப் பிரிவினரின் சுற்றிவளைப்புக்குள்ளாவதோடு அவ்வாறான தனியார் வகுப்புக்களை நடத்துவோர் மற்றும் அதற்கான இடவசதி வழங்கி அனுசரணை வழங்கும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கான  சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றமையையும் நினைவில் கொள்ளல்.
07.நோயைத் தருபவனும் அல்லாஹ் அதை சுகப்படுத்துபவனும் அல்லாஹ் என்ற ஈமானியக் கோட்பாட்டுக்கிணங்க எதிர்வரும் வியாழக்கிழமை மருதமுனை வாழ் அனைத்துப் பொதுமக்களும் நோன்பு நோற்று இருக்கரமேந்தி துஆ செய்யுமாறும் ஏனைய நற்காரியங்களில் ஈடுபடுமாறும் ஜம்இய்யத்துல் உலமா அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனம் அன்பாக வேண்டுகோள் விடுக்கின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்