எரிபொருள் விலையேற்றம்;கண்டித்து கரைதுறைப்பற்றுப் பிரதேசசபையில் கண்டனத் தீர்மானம். 

விஜயரத்தினம்  சரவணன்
நாட்டில் தற்போது அதிகரித்துள்ள எரிபொருளினுடைய விலையேற்றம் மற்றும் தற்போதைய ஆட்சியாளர்களினுடைய சர்வாதிகாரப்போக்கு என்பவற்றைக்கண்டித்து, கரைதுறைப்பற்று பிரதேசசபையில் கண்டனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசபையின் ஜூன் மாதத்திற்கான அமர்வானது 30.06.2021 இன்றையநாள் இடம்பெற்ற நிலையில், குறித்த அமர்விலேயே இக்கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த கண்டனத் தீர்மானத்தினை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சபை உறுப்பினரான சின்னராசா லோகேஸ்வரன் சபையில் முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இந்தக் கண்டனத் தீர்மானத்தின் மீதான விவாதம் சபையில்  இடம்பெற்றதோடு,பெருமளவான சபை உறுப்பினர்களின் ஆதரவுடன் குறித்த கண்டனத் தீர்மானமானது சபையில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் குறித்த கண்டனத் தீர்மானத்திற்கு பொதுஜனபெரமுன கட்சியைச் சார்ந்த இரு சபை உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த உறுப்பினர் ஒருவர் நடுநிலமை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்