இலங்கை மீனவர் சமூகம் சார்பாக இந்தியாவுக்கு நன்றி – மனோ கணேசன்

“எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” கப்பல் மூலமான இரசாயன கழிவினால் இலங்கை கடல் வளத்துக்கு ஏற்பட்ட அழிவை ஆய்வு செய்து பாதுகாக்க, இந்திய கடற்படை கப்பல் மூலம் இந்திய அரசு எடுத்தாண்ட முயற்சி பாராட்டத்தக்கது.

 

வரலாற்றில் ஒருபோதும் இடம்பெறாத பேரழிவு, இலங்கை கடல் வளத்துக்கு, “எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” கப்பலின் இரசாயன கழிவுகள் மூலம் ஏற்பட்டது. இதனால் மேற்கு கரை முழுக்க மீனவ சமூகம் தொழில் இழந்து, வாழ்விழந்து, ஏறக்குறைய நடுத்தெருவுக்கு வந்துள்ளது. அவர்களது ஆவேச குரல் இலங்கை அரசுக்கு கேட்கவில்லை. ஆனால், இந்திய அரசுக்கு கேட்டுள்ளது.

 

ஒரு நட்பு நாட்டு அரசு என்ற முறையில், எங்கள் மீனவர் வாழ்வை மீண்டும் கட்டி எழுப்ப, இந்திய கடற்படை கப்பல் “சர்வேக்ஸக்” மூலம் இந்திய அரசு செய்துள்ள உதவிக்கு, இலங்கை மீனவர் சமூகம்  சார்பாக நாம் நன்றி கூறுகின்றோம் என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

 

“எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” கப்பலின் இரசாயன கழிவுகளை ஆய்வு செய்து இலங்கை கடல் வளத்தை பாதுகாக்க இந்திய அரசு தனது கடற்படை மூலம் செய்து வரும் உதவிகள் தொடர்பில் மேலும் மனோ எம்பி கூறியுள்ளதாவது,

 

நடுக்கடலில், இரசாயன பொருகளை சுமந்தபடி எரிந்து கொண்டிருந்த  “எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” கப்பலை, இலங்கை துறைமுகத்துக்கு, இலங்கை கடல் எல்லைக்குள் வர சொன்னவர் யார் என எவருக்கும் தெரியாது. அந்த அமைச்சர் அல்லது அதிகாரி யார் என மக்கள் கேட்கிறார்கள். அவரை கண்டால் வரச்சொல்லுங்கள். அவருக்கு சுவையான மீன் உணவு தர தாங்கள் தயார் என மீனவ மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

 

இலங்கை கடல் வளம் அழிகிறது. மீனவர் வாழ்வு அழிகிறது.  இலங்கை மக்களுக்கு உணவில் மீன் இன்று சந்தேக பொருள் ஆகி விட்டது. இவற்றுக்கான நஷ்டஈட்டை “எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” எப்போது தரும்? எத்தனை கோடிகள் கிடைக்கும்? அதில் எத்தனை இலட்சங்கள் மீனவர்களுக்கு கிடைக்கும்? இந்த கேள்விகளுக்கு விடைகள் இன்னமும் இல்லை.

 

இலங்கை அரசு இவற்றுக்கு பதில் கூறாமல் ஒளிகிறது. இதுவரை துறைமுக துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவோ, மீன்வள துறை அமைச்சர் டக்லஸ் தேவாந்தாவோ இதுபற்றிய உண்மைமைகளை பேச மறுக்கின்றனர். பேரழிவுக்கு பொறுப்பேற்க மறுக்கின்றனர்.

 

இந்த பின்னணியில் இந்திய அரசின் இந்த உதவி ஒரு ஆறுதல். “சாகர் ஆரக்ஸா” என்ற கடல் செயற்பாட்டின் மூலம் இந்திய கடற்படை கப்பல் “சர்வேக்ஸக்” எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே மற்றும் குறிப்பிட்ட கப்பலின் தலைவர், மாலுமிகளுக்கு , இலங்கை மீனவர் சமூகம் சார்பாக எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.   

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்