பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

100 மாணவர்களுக்கும் குறைவானோரைக் கொண்டுள்ள பாடசாலைகளை ஜூலை மாதத்திற்குள் திறப்பதற்கான திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நூறுக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 2,962 பாடசாலைகள் நாட்டில் உள்ளன என்று கல்வி அமைச்சில் இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர்  பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

முதற்கட்டமாக குறித்த பாடசாலைகளை திறப்பதற்கான திட்டத்தை செயற்படுத்த ​நேற்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுகாதார தரப்பினரின் அனுமதியுடன் 100 மாணவர்களுக்கும் குறைவானோரைக் கொண்ட பாடசாலைகளை ஜூலை மாதத்திற்குள் திறப்பதற்கு கல்வி அமைச்சு முயற்சிப்பதாகவும் அமைச்சர்   பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எனினும், இதற்கு முன்னர் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் 2,42,000 ஆசிரியர்கள் உள்ளனர். இந்நிலையில், அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை ஜனாதிபதி வழங்கியுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்