45 வயதைத் தாண்டி பட்டதாரிகள் மீது இந்த அரசு எவ்வித கவனமும் கொள்ளவில்லை-மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் 45 வயதைத் தாண்டிய பட்டதாரிகள் உருக்கமான ஆதங்கம்
குறைந்த கல்வித் தகமைகளைக் கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக புதிய புதிய நிகழ்ச்சித் திட்டங்களுடாக ஒருலெட்சம் வேலைவாய்ப்பு என்னும் செயற்திட்டங்களை உருவாக்கும் அரசாங்கம் 45 வயதுக்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்குவதில் தாமதத்தைக் காட்டுகின்றது.
அரசாங்கத்தினால் அறுபதாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருந்தும் சுமார் ஐம்பத்து மூவாயிரத்து இருநூறு பட்டதாரிகளுக்கு மாத்திரமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அரசும் சரி, இந்த அரசும் சரி ஒவ்வொரு அரசாங்கமும் சாக்குப் போக்குகளைச் சொல்லி 45 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளை நிராகரித்துக் கொண்டே இருக்கின்றார்கள். 45 வயதைத் தாண்டிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பில் இதுவரை எந்தவித திட்டங்களும் வகுக்கவில்லை என்று கூறுகின்றார்கள்.
அவ்வாறான செயற்திட்டங்களை உருவாக்கும் அரசாங்கத்திற்கு 45 வயதுக்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்குவதில் தாமதத்தைக் காட்டுகின்றது.
பெரும்பான்மை சமூகம் இருக்கின்ற பகுதிகள் பட்டதாரிகள் தொடர்பில் பாரிய போராட்டங்கள் அரசியல்வாதிகளின் பின்னணியில் இடம்பெறுகின்றன. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்தவரையில் இதுவரைக்கும் 45 வயதைத் தாண்டிய பட்டதாரிகள் தொடர்பில் எவ்வித முன்னெடுப்புகளோ, நகர்வுகளோ மேற்கொள்ளப்படவில்லை. அவர்கள் இது தொடர்பில் பாராளுமன்றத்திலும் பேசவில்லை.
இதற்கு முந்திய காலங்களில் 45 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது. இந்த அரசாங்கத்தின் போதும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. ஆனால் பட்டதாரிகள் நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். எமது இந்தப் பிரச்சினையைக் கொண்டு நகர்த்துவது யார் என்பது தற்போது கேள்விக்குறியாக இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளிடமும் எமது விடயங்கள் தொடர்பில் தெரிவித்திருந்தோம். ஆனால் எவரும் இதுவரை அதற்கான முறையான பதிலிறுப்புச் செய்யப்படவில்லை.
எமது வேலைவாய்ப்பு நிராகரிக்கப்பட்டமைக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது சிரமம் என்ற கருத்தும் தெரிவிக்கப்படுகின்றது. நாம் எங்களுக்கான ஓய்வூதியதம் கேட்கவில்லை. ஒரு அரசாங்கத் தொழிலினைத் தான் கேட்கின்றோம். ஏதேனும் சபைகள் அல்லது திணைக்களங்களில் எமக்கான தொழில்வாய்ப்பினை வழங்கி ஓய்வூதியம் இல்லாவிட்டாலும் தொகை அடிப்படையில் வழங்குவதற்கான திட்டத்தினை மேற்கொண்டு எமக்கான தொழில் வாய்ப்பினைத் தருமாறே கேட்கின்றோம்.
அமைச்சரவையில் அனுமதி பெறப்பட்ட அறுபதாயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் சுமார் ஏழாயிரம் வரையில் வேலைவாய்ப்புகள் இன்னும் மீதமிருக்கின்றது. அந்த ஒதுக்கப்பட்ட வேலைகளுக்கான நிதி திறைசேரியில் இருக்கும் போது 45 வயதுக்கும் மேற்பட்ட 724 பேருக்கும் வேலைவாய்ப்பினை வழங்குவது அரசிற்கு மிகப் பெரிய வேலையாக இருக்காது. ஆனால் அரசு இதனைப் புறந்தள்ளிக் கொண்டிருக்கின்றது.
எனவே நாங்கள் இதனை இவ்வாறே தொடர விட முடியாது. எமக்கான போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றோம். நாங்கள் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தினை மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ளோம். எமது மட்டக்களப்பு மாவட்;டத்தில் 45 வயதுக்கும் மேற்பட்ட பட்டாதாரிகள் சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். எனவே நாங்கள் இந்த உண்ணாவிரதப் போரட்டத்தினை மேற்கொள்ளும் போது அவர்களுக்கு ஏதும் பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்படுகின்ற பட்சத்தில் அதன் முழுப்பொறுப்பும் அரசாங்கத்தையும், இந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளையுமே சாரும் என்று தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை