காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய அரசாங்கம் முன்வைத்த வேலைத்திட்டம் என்ன? சுமந்திரன் இடித்துரைப்பு

இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என அரசாங்கம் அமைத்த ஆணைக்குழுவே தெரிவித்துள்ள நிலையில் அவர்களை கண்டறிய அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டம் என்ன?

இன்று ஐரோப்பிய ஒன்றியத்தை ஏமாற்றுவதற்கு எடுக்கும் கண்துடைப்பு நடவடிக்கைகளை முழு உலகமும் விளங்கிக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.

உண்மைக்கு புறம்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து அரசாங்கம் தம்மை நல்லவர்களாக காட்ட முயற்சிக்கும் நடவடிக்கைகள் ஒருபோதும் வெற்றிபெறாது எனவும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்த) சட்ட மூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான ஒரு கட்டளை மற்றும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கம் இன்று கொண்டுவந்துள்ள திருத்த சட்டங்களை நாம் வரவேற்கின்றோம். இந்த திருத்தங்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதில் மிகமுக்கியமாக நீதிபதிகள் சிறைச்சாலைக்கு சென்று அதேபோல் தடுப்புக்காவலில் உள்ளவர்களை பார்வையிடுவது, தடுப்புக்காவலில் உள்ளவர்களுக்கு சித்திரவதை நடந்துள்ளதா, அவர்கள் ஆரோக்கியமானவர்களாக என்பதை அவதானிக்க வேண்டும்.

சட்டத்தில் இது நல்லதாக இருந்தாலும் யதார்த்தம் எப்படி இருக்கும் என்பது எமக்கு தெரியும். ஆனால் இப்போது ஏன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

எமது சுயாதீனத்தை பாதுகாப்போம், சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் எனக் கூறிக்கொண்டு யாரை முட்டாளாக்க இந்த திருத்தங்களை கொண்டு வருகின்றீர்கள்.

சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலம் 1994 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது.

இவற்றில் ஏழு பேருக்கே இப்போது வரையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இதன் மூலமாக கிடைத்த பலன் பூச்சியமாகவே அமைந்துள்ளது. எனவே இந்த சட்டம் இருப்பதில் அர்த்தமே இல்லை. அதேபோல் காவல்துறையினர் தடுப்புக்காவலில் உள்ளவர்களை சித்திரவதை செய்தமை சகல வழக்குகளிலும் பதிவாகியுள்ளது.

அவ்வாறு இருக்கையில் இந்த சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவந்து என்ன நடக்கப்போகின்றது. ஏனையவர்களுக்கு இதனை காட்டவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் இந்த திருத்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

நீதிபதி சிறைச்சாலைக்கு செல்ல வேண்டும் என கூறினாலும் அவ்வாறு எப்போது நடந்துள்ளது, அப்படியே செல்வார்கள் என்றாலும் அதனை எவ்வாறு உறுதிப்படுத்துவது.

இதனை நடைமுறைப்படுத்த ஏதேனும் பொறிமுறை உள்ளதா? ஒரு சிலர் சென்றிருக்க முடியும், ஆனால் யதார்த்தம் என்ற ஒன்று உள்ளது, சட்டத்தில் நீதிபதிகளை கட்டாயப்படுத்த முடியுமா. எனவே இவையெல்லாம் கண்துடைப்பு என்றே நாம் கருதுகின்றோம். சிறைச்சாலைக்குள் சித்திரவதைகளுக்கு உள்ளாகும் நாடுகளின் பட்டியலில் மோசமான நிலையில் நாமும் உள்ளோம்.

அதேபோல் சிறைச்சாலைக்குள் சித்திரவதைகள் இடம்பெறுவது ஒரு தொற்றுநோய் போன்று பயங்கரவதா தடை சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

சித்திரவதைகளின் மூலமாக ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு அவற்றை ஏற்றுக்கொள்ளும் சாட்சியாக மாற்றும் செயற்பாடுகளும் இடம்பெற்றன.

விசாரணைகள் நடத்தவே தேவையில்லை, சித்திரவதையின் மூலமாகவே சாட்சியங்கள் உருவாக்கப்படும். இதெல்லாம் நாம் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளோம். உண்மையான குற்றவாளி வெளியில் சுற்றித்திரிவதுடன் சுற்றவாளி தண்டிக்கப்படுகின்றார்.

தேசிய பாதுகாப்பிற்கு இது பாரிய அச்சுறுத்தல். அதேபோல் ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை நீக்கியுள்ளது. இதற்கு முன்னரும் இதே நெருக்கடி ஏற்பட்ட வேளையில் பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத தடுப்பு சட்டம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது.

இதுவும் நல்லதல்ல, ஆனால் பயங்கரவாத தடை சட்டத்தை விடவும் நூறு வீதம் நல்லதென்றே நாம் கூறுவோம். எவ்வாறு இருப்பினும் பயங்கரவாத தடை சட்டத்தை திருத்துவது அர்த்தமற்றது, இது முழுமையாக நீக்கப்பட வேண்டும். பயங்கரவாத தடுப்பு சட்டங்கள் உள்ளன, அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் சமத்தன்மை கையாளப்பட வேண்டும்.

காணமால் ஆகப்பட்டோருக்கான ஆணைக்குழு பற்றி பேசினீர்கள், தமிழ் மக்கள் காணமால் ஆக்கப்பட்டனர் என்பது மக்கள் கூற முன்னர், உங்களின் அரசாங்கம் உருவாக்கிய ஆணைக்குழுவே இதனை கூறியது.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணமால் போயுள்ளனர் என்பதை நீங்கள் அமைத்த ஆணைக்குழுவே கூறியது. 20 ஆயிரம் பேர் காணமால் போனார்கள் என பரணகம ஆணைக்குழு கூறியது, உடலாகம ஆணைக்குழு, எல்.எல்.ஆர்.சி ஆணைக்குழு என்பனவும் கூறியுள்ளன.

மஹிந்த ராஜபக்ஷ நியமித்த ஆணைக்குழுவே இதனைக் கூறியுள்ள நிலையில் இது குறித்து நீங்கள் கூறவருவது என்ன. பாதுகாப்பு படைகளிடம் சரணடைந்த மூவாயிரம் பேர் காணமால் போயுள்ளனர் என உங்களின் ஆணைக்குழுவே கூறியுள்ளது.

உங்களின் ஆணைக்குழுவே இதனை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவரைக்கூட கண்டறிய முடியாது போயுள்ளது என்றால் நீங்கள் பேசுவதில் அர்த்தம் உள்ளதா? கொழும்பில் 11 இளைஞர்களை கடற்படையினர் கடத்தி கப்பம்பெற்ற சம்பவத்தில் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் தொடர்புபட்டிருந்தனர்.

அவர்களுக்கு விசாரணை நடத்தப்பட்டது, இறுதியாக அந்த வழக்குகளுக்கு என்ன நடந்தது. நீங்கள் தலையிட்டு வழக்குகளை மாற்றிவிட்டு இங்கு வந்து நியாயம் பேசுவதில் என்ன அர்த்தம் உள்ளது.

எனவே இந்த சட்ட திருத்தங்கள் அனைத்துமே ஐரோப்பாவை ஏமாற்றும் கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே. இப்போதே காலம் கடந்துவிட்டது. உண்மையாக அரசாங்கம் நல்ல நோக்கத்தில் இவற்றை செய்யவில்லை.

ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமல்ல முழு உலகமும் இதனை தெரிந்துகொள்ள வேண்டும். மனித உரிமை சட்டங்களை பின்பற்றும் உங்களின் செயற்பாடு உண்மையான ஒன்றல்ல. எனவே இந்த பொய்யான செயற்பாடுகள் வெற்றிபெறாது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்