இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் தீர்மானம் இல்லை
பசுமையான சமூக பொருளாதார மாதிரியினை கட்டியெழுப்பும் நோக்கில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சுக்கொல்லிகள் , இறக்குமதி செய்வதை தடை செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானமானது, புதிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் மாற்றப்பட்டுள்ளது என சில இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் ஊடாக பரப்பப்படுகின்ற செய்திகளில் எவ்வித உண்மை தன்மையும் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
இரசாயன உர பாவனைக்கு பதிலாக சேதன உரங்களை பயன்படுத்தி வேளாண்மையில் ஈடுபடுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை இரத்து செய்வதற்கான எவ்வித எண்ணமும் அரசாங்கத்திடம் இல்லை. ஜனாதிபதி தேர்தலிற்கு முன்பதாக மக்கள் மத்தியில் முன்வைத்த சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பசுமையான சமூக பொருளாதார மாதிரியினை கட்டியெழுப்பும் உறுதிமொழியினை நிறைவேற்றும் வகையிலேயே இரசாயன உரங்கள் மற்றும் பூச்சுக் கொல்லிகள் இறக்குமதியினை தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.
பசில் ராஜபக்ஷ புதிய நிதியமைச்சர் நியமனம் பெற்றதன் பின்னர் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து அரசாங்கத்தின் தற்போதைய மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினார். அங்கு பல்வேறு கருத்துக்கள், வாதங்கள் மற்றும் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன. அவை அனைத்தையும் சரிசமமாக மதிப்பாய்வு செய்து மிகவும் சரியான செயன்முறையினை திட்டமிடுவதற்கு தேவையான 05 துணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. பசுமையான பொருளாதாரத்தினை உருவாக்கும் கொள்கையை மாற்றுவதற்கு இந்த கலந்துரையாடலின் போது எவ்வித யோசனையும் முன்வைக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை