மாவடிப்பள்ளி வீதி விவகாரம் : பலத்த விவாதத்தின் பின்னர் பிரேரணையை காலவரையின்றி ஒத்திவைத்த பிரதேச சபை

.
[நூருல் ஹுதா உமர் ]
விசேட பிரேரணையை முன்வைத்து காரைதீவில் இன்று (15) காலை விசேட அமர்வு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் தலைமையில் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. பல தசாப்தங்களாக குண்டும் குழியுமாக சேறுடன் காணப்படும்  மாவடிப்பள்ளி – கல்முனையை இணைக்கும் வண்டு வீதியை காபட் வீதியாக மாற்ற பிராந்திய தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலரும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இவ்வீதியை புனரமைக்கும் பணியை இலங்கை அரசாங்கம் 01 லட்சம் கிலோமீட்டர் வீதி அபிவிருத்தியின் கீழ் காபட் வீதியாக மாற்றும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே விசேட அமர்வு ஒழுங்கமைக்கப்பட்டு விசேட பிரேரணை கொண்டுவரப்பட்டது. இந்த பிரேரணையை உறுப்பினர் மோகனதாஸ் வழிமொழிய உறுப்பினர் எம்.என்.எம். றனீஸ் எதிர்த்தார்.
காரைதீவு தவிசாளர் கி. ஜெயசிரில் உட்பட பிரதேச சபை தமிழ் பிரதிநிதிகள் இவ்வீதி உருவானால் காரைதீவுக்கு ஆபத்து என்று தனது பக்க கருத்தை முன்வைத்து இங்கு உரையாற்றினார்கள். அதற்கு பதிலளித்த உதவித்தவிசாளர் இந்த வீதி பல தசாப்தங்களாக உள்ளது என்றும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பல தசாப்தங்களாக பாவித்து வருகிறார்கள் என்றும் தெரிவித்து மாவடிப்பள்ளி- கல்முனை வண்டு வீதியானது தனியே முஸ்லிங்களுக்கு மட்டும் சொந்தமான முஸ்லிங்களின் பாவனைக்கு மட்டும் சொந்தமான ஒன்றல்ல. இது இலங்கையில் வாழும் எல்லா மக்களுக்கும் சொந்தமான வீதி என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய தவிசாளர் மற்றும் தமிழ் தேசிய  உறுப்பினர்கள் தனது பக்க கருத்துக்களையும் முன்வைத்தனர்.
வீதியின் அவசியம் குறித்தும் இந்த அபிவிருத்தியின் தேவைகள் பற்றியும் தவிசாளர் ஜெயசிறில் கடந்த காலங்களில் விட்ட பிழைகள் தொடர்பிலும் பிரதித்தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் உட்பட முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் எல்லோரும்  உரையாற்றினார். வீதியின் அபிவிருத்தி திட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எம். ஜலீல், சுயட்சை குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.என்.எம். ரணீஸ், எம்.எச்.எம். இஸ்மாயில் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கருத்துக்களை முன்வைத்தனர். வாத பிரதிவாதங்கள் அதிகரித்து  நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த விசேட அமர்வில் பலத்த கருத்தாடல் நடைபெற்றது.
பிரதேச சபை உறுப்பினர் கே. குமாரசிறி இப்பிரரேனை தொடர்பில் ஆலோசனையுடன்  கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த பிரேரணை தொடர்பில் சமூகமளித்த  11 உறுப்பினர்களுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் 05 பேர் வாக்கெடுப்புக்கு விடுமாறும் ஆறுபேர் ஒத்திவைக்குமாறும் கோரியதற்கு இணங்க காலவரையரையின்றி இப்பிரேரனை ஒத்திவைக்கப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் உள்ள உறுப்பினர் ஒருவர் சபைக்கு சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்