கனடாவில் ஒன்றாரியோவிற்கு வெளியே முதற் தடவையாக பொதுத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராகத் தெரிவாகியுள்ள தமிழ் பேசும் மருத்துவர்!

கனடாவில் ஒன்றாரியோவிற்கு வெளியே முதற் தடவையாக பொதுத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராகத் தெரிவாகியுள்ள தமிழ் பேசும் மருத்துவர்

(ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)

கனடாவில் இதுவரை தமிழ் மக்கள் அதிகமாக வாழும் ஒன்றாரியோ மாகாணத்திலேயே அதிக அளவு தமிழ் பேசும் வேட்பாளர்கள் மத்திய அரசாங்கத்திற்கான பொதுத் தேர்தலிலும், மாகாண சபைத் தேர்தல்களிலும் மாநகர சபை மற்றும் கல்விச் சபைக்கான தேர்தல்களிலும் போட்டியிட்டும் வெற்றி பெற்றும் வந்துள்ளனர். தற்போது கூட வெற்றிகளை ஈட்டிய சிலர் தங்கள் மக்கள் பிரதிநிதிகளாக தங்கள் அற்புதமான பணிகளை ஆற்றிவருகின்றார்கள்.

இவ்வாறான கனடிய அரசியல் சூழலில் முதற் தடவையாக கனடாவின்
(Saskatchewan) சச்கச்சுவான் மாகாணத்தில் எதிர்வரும் கனடிய மத்திய பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில், லிபரல் கட்சின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தெரிவாகியுள்ள வைத்திய கலாநிதி இருதய நோய் வைத்திய நிபுணர் டாக்டர் ரூபன் ராஜகுமார் லிபரல் கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற உற்சாகம் தரும் செய்தியை கனடா வாழ் தமிழ் பேசும் சமூகத்தோடு பகிர்ந்து ◌கொள்வதில் கனடா உதயன் மற்றும் நண்பன் இணைய ஊடகம் ஆகியன பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றன.
கனடாவின் (Saskatchewan) சச்கச்சுவான் மாகாணத்தில் Saskatchewan மேற்குத் தொகுதியில் போட்டியிடவுள்ள வைத்திய கலாநிதி அவர்கள் உதயன் நிறுவனத்தின் நீண்ட கால நண்பர் விக்னேஸ்வரன் (வரன்) அவர்கள் எமது உதயன் அலுவலகத்திற்கு நேற்று அழைத்து வந்தார். அத்தருணம் சில மணி நேரம் நாம் வேட்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ரூபன் ராஜகுமார் அவர்களோடு உரையாடி பல விடயங்களை அவரிடமிருந்து அறிந்து கொண்டோம்.
டாக்டர் ரூபன் ராஜகுமார் அவர்களின் துணைவியாரும் ஒரு இருதய நோய் தொடர்பான வைத்திய நிபுணர் ஆவார். அவர் தற்போது ரொறன்ரோ மாநகரில் தனது மருத்துவப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.
கடந்த நாற்பது வருடங்களாக (Saskatchewan) சச்கச்சுவான் மாகாணத்தில் மாகாணத்தில் வாழ்ந்து வருவதாகக் கூறிய டாக்டர் ரூபன் ராஜகுமார் அவர்கள் அங்கு மக்களுக்கு சேவையாற்றி வருவதில் மகிழ்ச்சியும் எல்லையற்ற நிறைவையும் அடைந்துள்ளதாகவும், முக்கியமாக கனடாவின் பழங்குடி இனத்தின் மக்களுக்கு வைத்திய சேவையாற்றுவதற்காகவே முக்கியமாக தனக்கு கனடிய அரசு நாற்பது வருடங்களுக்கு முன்னர் விசாவை வழங்கி அந்த மாகாணத்திற்கு அழைத்ததாகவும் கூறினார்.
பழங்குடி மக்களுக்கு நான் மருத்துவ சேவைகளை வழங்குவதில் தான் அதிக திருப்தி அடைந்ததாகவும், அந்த காலப்பகுதியை தனது வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் முகத்தில் புன்னகையோடு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் அதிகளவு வாழக்கூடிய சூழ்நிலையில்லாத ஒரு மாகாணத்தில் வேற்றின மக்கள் மட்டுமே அதிகம் வாழுகின்ற தொகுதியில் வாழும் உங்களுக்கு அங்கு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில் சவால்கள் அதிகம் இருக்குமே? அத்துடன் வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்குமே? என்ற ஒரு கேள்வியை நாம் முன்வைத்தோம்.

அதற்கு அவர் சிறிய புன்னகையுடனும் முகத்தில் நம்பிக்கையின் பிரதிபலிப்புக்கள் தோன்றிடவும் பதில் தந்தார்.

“நான் அங்கு நாற்பது வருடங்களுக்கு மேலாக வைத்தியராகவும், மருத்துவத் துறையின் பல்கலைக்ழகத்தின் விரிவுரையாளராகவும் உள்ளேன். அத்துடன் தொடக்கத்திலிருந்தே அரசியல்வாதிகளோடு அரசியல் ஈடுபாடு கொண்ட மக்களோடும் குறிப்பாக கனடாவின் பழங்குடி மக்களின் தேவைகளை நான் அதிக நேசத்தோடு நிறைவேற்றியிருக்கின்றேன்.
இவ்வாறாக அந்த மாகாணத்தில் வாழும் மக்களில் பலரது வேண்டுகோளின் பேரில் தான் நான் வேட்பாளராக நிற்கத் துணிந்துள்ளேன்.
நான் கனடாவிற்கு வருவதற்கு முன்பாக இங்கிலாந்தில் மருத்துவராகப் பணியாற்றியுள்ளேன். அங்கும் எனது இளைமைக் காலத்தில் பல அரசியல்வாதிகளோடு இணைந்து அவர்களின் தொண்டனாகப் பணியாற்றியுள்ளேன். அந்த அனுபவப் பார்வை இன்னும் என்னோடு ஒட்டிக் கொண்டுள்ளது.
பின்னர் சச்கச்சுவான் மாகாணத்தில் Saskatchewan மேற்குத் தொகுதியில் எனது பெயரை முன்மொழிந்தவர்களே அங்கு நிரந்தரமாக வசிக்கும் கனேடியர்கள் தான். அவர்கள்தான் அங்கு தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்ற சக்திகளாக விளங்குகின்றார்கள். அத்துடன் அந்த மாகாணத்தின் முதல்வர் அவர்களிடமிருந்து பல தடவைகள் எனக்கு விருதுகள் வழங்கப்பெற்றுள்ளன. அவை, நான் பழங்குடி மக்களுக்கு பல சவால்களின் மத்தியில் பணியாற்றிய காரணத்திற்காகவே வழங்கப்பெற்றன. இவற்றை முன்வைத்தே நான் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுகின்றேன். எனக்கு ஒன்றாரியோ மாகாணத்தில் வாழும் மக்களின் வாழ்த்துக்களும் இங்குள்ள பெரியவர்களின் ஆசிர்வாதமும் தான் எனக்குத் தேவை”
என்றார்.
எனவே, சச்கச்சுவான் மாகாணத்தில் Saskatchewan மேற்குத் தொகுதியில் போட்டியிடும் தமிழ் அன்பர், வைத்திய கலாநிதி , மக்கள் சேவகர்
டாக்டர் ரூபன் ராஜகுமார் அவர்களிற்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்
அவரது மின்னஞ்சல் முகவரி- ruben.rajakumar@usask.ca PHONE:- 306 612 3105

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.