மன்னாரில் கிளர்ந்தெழுந்த மக்கள்!

தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில்,கருப்பு யூலை தினத்தையொட்டி 15 அம்சக் கோரிக்கையை முன்வைத்து மௌன கவனயீர்ப்பு போராட்டம்  மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம்பெற்றது.

இந்த போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மதத்தலைவர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த மௌன கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வாயினை கருப்பு துணியால் கட்டியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இடம் பெற்றது.

எரிபொருள் விலையை அதிகரிக்காதே, விவசாயிகள், கடற்றொழிலாளர்களுக்கு மானியம் வழங்கு, ஏழைகளை வஞ்சிக்காதே, அத்தியாவசிய பொருட்களுக்கு விலை அதிகரிக்காதே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு விரைந்து முடிவு சொல், ஜனநாயக போராட்டங்களை நசுக்காதே, கொரோனாவை காட்டி பொய் வழக்கு போடாதே, கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்தை மீளப்பெறு, கிசாலினியின் மரணத்திற்கு நீதியான விசாரணை வேண்டும்.

விவசாயிகளின் உரம் மருந்து பிரச்சனைக்கு தீர்வு வழங்கு , சட்டவிரோத கடலட்டை பண்ணைகளை அகற்று, எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்காதே, சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, அப்பாவி தமிழ் இளைஞர்களை கைது செய்யாதே, குடும்ப ஆட்சியில் நாட்டை வெளிநாடுகளுக்கு ஏலம் போடாதே, வடக்கில் திட்டமிட்ட நில அபகரிப்பை நிறுத்து பௌத்த மயமாக்கலை திணிக்காதே, ஜனநாயகத்திற்கு மதிப்பளி ஊடக அடக்கு முறையை நிறுத்து,

அரை குறையாக உள்ள வீட்டுத்திட்டங்களை நிறைவு செய் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து குறித்த போராட்டம் இடம்பெற்றது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.