வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு பலம் –  பிரதமர் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு ஒரு பலம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் குருநாகல் பிராந்திய தூதரகம் இன்று (27) திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்விற்கு அலரி மாளிகையில் இருந்தவாறு இணைய காணொளி தொழில்நுட்பம் ஊடாக நேரடியாக இணைந்து கொண்டிருந்த போதே  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குருநாகல் பிராந்திய தூதரகத்தின் நினைவு பலகை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

வடமேல் மாகாண ஆளுநர் திரு.ராஜா கொள்ளுரே அவர்களினால் தூதரக அலுவலகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் இணைய காணொளி தொழில்நுட்பம் ஊடாக இணைந்து கொண்டு  பிரதமர் ஆற்றிய உரை வருமாறு,

மிக நீண்டகாலமாக வெறும் வாய்ப் பேச்சிற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த தூதரக தேவையை குருநாகல் மாவட்டத்தில் பூர்த்தி செய்ய முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

வடமேல் மாகாணத்தை சேர்ந்தவர்களே பெரும்பாலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது எமக்கு தெரியும். இதன் தேவையை இவர்கள் பல காலமாக சுட்டிக்காட்டியிருந்த போதிலும் இதனை நிறுவுவதற்கு எவரும் முன்வரவில்லை.

ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அந்த தேவையை உணர்ந்தோம். இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த தூதர அலுவலகத்தின் ஊடாக வடமேல் மாகாண மக்கள் மட்டுமின்றி அதனை சூழவுள்ள அனைத்து மக்களும் நன்மையடைவார்கள் என நாம் நம்புகின்றோம்.

நாட்டிற்கு பெரும் தொகையான அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை மக்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும் நாம் நமது கடமையை நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும்.

அவர்கள் வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்வது சுகத்தை அனுபவிப்பதற்காக அல்ல. தமது குடும்பத்தை வலப்படுத்தி தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக் கொடுப்பதற்காகவாகும். அவர்கள் நாட்டிற்கு பாராமாக அன்றி நாட்டிற்கு பலமாக இருப்பதாகவே நாம் நம்புகின்றோம்.

அவர்களுக்கு அவர்கள் உள்ள நாடுகளிலும், வேலைத்தளங்களிலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதை நாம் அறிவோம். சிலவேளைகளில் அந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் பிறப்புச் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் திருமணச் சான்றிதழ்கள் தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்படும். இந்த விடயங்களை விரைவாகச் சரிசெய்ய செய்ய வேண்டியிருக்கும் போது, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

வெளிநாட்டில் பணிபுரியும் போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படின் அல்லது திடீர் மரணங்கள் சம்பவிக்கும் நிச்சயமாக தூதரகத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும்.
அதுமாத்திரமன்றி வேலைவாய்ப்பிற்காக அல்லது வேறு ஏதேனும் தேவைக்காக வெளிநாட்டிற்கு சென்றவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களையும் அறியாத சந்தர்ப்பத்தில் அவர்கள் குறித்த தகவல்களை பெறுவதற்கு அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவளிக்கும் ஒரே இடம் தூதர அலுவலகமாகும்.

இன்றுவரை இந்த அனைத்து செயற்பாட்டிற்காகவும் கொழும்பிற்கு செல்ல வேண்டி இருந்தது. நாட்டின் பெரும்பாலானவர்கள் இத்தேவைக்காக கொழும்பிற்கு வருவதால் சில சந்தர்ப்பங்களில் ஒரே நாளில் தமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கும். இரண்டு, மூன்று நாட்கள் செல்லும். அதற்காக கொழும்பில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதற்கு பணம் செலவாகும்.

ஆனால் வடக்கு, தெற்கு மக்களுக்கு அப்பிரச்சினை இல்லை. ஏனெனில் யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறையில் தூதரகங்கள் காணப்படுகின்றன.

இவை அனைத்து தொடர்பிலும் சிந்தித்தே நாட்டிற்கு பெரும் தொகையான அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் வடமேல் மாகாணத்தில் தூதரகமொன்றை திறக்க தீர்மானித்தோம்.

இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாக எமக்கு மக்களின் தேவைகளை இலகுபடுத்த முடியும்.

கொவிட் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை முன்னெடுத்துவரும் அதேவேளையிலேயே நாம் இவை அனைத்தையும் மேற்கொண்டு வருகிறோம். அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மக்களின் உயிரை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். சிலர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு அரசியல் தேவை மாத்திரமே உள்ளதே தவிர மக்கள் குறித்த எண்ணம் இல்லை. மேலும் சிலர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். நாம் ஒரு உலகளாவிய தொற்றுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில் எம்மால் முடிந்தவகையில் மக்களும் செய்துவருகிறோம்.

இதனால் மக்களும் இவை அனைத்து குறித்தும் சிந்திப்பர் என நம்புகின்றோம். அரசாங்கம் என்ற ரீதியில் உங்கள் எதிர்காலத்திற்காகவும், நாட்டின் எதிர்காலத்திற்காகவும் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களை எவ்வித தடுமாற்றமும் இன்றி மேற்கொள்வோம் என்பதை கூறிக்கொள்வதுடன், இன்று திறக்கப்படும் தூதரகத்தின் ஊடாக மக்களுக்கு செயற்திறனான சேவையை பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக பாலசூரிய, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுமித் உடுகும்புர, மஞ்சுளா திசாநாயக்க, ஜயரத்ன ஹேரத், குருநாகல் மேயர் துஷார ரஞ்ஜீவ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்