எந்த ஒரு பெரும்பான்மை அரசாங்கமும் இதய சுத்தியுடன் தமிழர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை – இராதாகிருஸ்ணன் எம்.பி தெரிவிப்பு.

எந்த ஒரு பெரும்பான்மை அரசாங்கமும் இதய சுத்தியுடன் தமிழர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை. எனவே அந்த நிலைதான் இந்த அரசாங்கத்திலும் தமிழர்களுக்கு நடக்கும். இந்த அரசாங்கம் தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் (11.08.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்த கொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

தமிழர்களின் பிரச்சினை தொடர்பான பேச்சுவாரத்தையை நாம் இரண்டு விதமாக பாரக்கலாம்.ஒன்று யுத்தத்திற்கு முன்பு இரண்டாவது யுத்தத்திற்கு பின்பு.யுத்தத்திற்கு முன்பு அரசாங்கம் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

அந்த பேச்சுவாரத்தையும் தோல்வியில்தான் முடிவடைந்தது.அதற்கு இரண்டு தரப்பினரும் காரணம்.யாரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.நீ பெரியவனா?நான் பெரியவனா என்ற போட்டியில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து அரசாங்கம் யுத்தத்தில் வெற்றி பெற்றது

இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை யுத்தத்தின் பின்னரானது.உண்மையிலேயே இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டுமாக இருந்தால் அதனை முன்னாள் ஜனாதிபதி இன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்ச செய்திருக்க வேண்டும்.

ஆதற்கு காரணம் யுத்தத்தை வெற்றி கொண்டு பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் பெரும் மதிப்பை கொண்டிருந்த ஒருவர் அவர்.அவர் நிலைமையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தி தீர்வை பெற்றுக் கொடுத்திருந்தால் நிச்சயமாக சிங்கள மக்கள எதிர்த்திருக்க மாட்டார்கள்.ஆனால் அவர் அதனை செய்யவில்லை.காரணம் தனது செல்வாக்கு சரிந்துவிடும் என்ற பயமே.

பின்பு வந்த நல்லாட்சி அரசாங்கமும் இதனை இதய சுத்தியுடன் அனுகவில்லை.பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ கூடுமானவரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதவிகளை பெற்றுக் கொண்டு அவர்களின் பிரச்சினைகளை இழுத்தடிப்பு செய்து காலத்தை கடத்திவிட்டார்.

இன்று மீண்டும் இந்த ஆட்சியில் ஜி.எல்.பீரிஸ் மற்றும் பெசில் ராஜபக்ச ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.அது எந்தளவு சாத்தியமானது என்பது கேள்விக்குறியே.

ஏனெனில் தொடர்ச்சியாக இடம்பெற்ற பல பேச்சுவார்த்தை மேசைகளில் இருந்த ஒரே குழுவே இன்று மீண்டும் பேச இருக்கின்றது.மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இன்றைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளர் பெசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அமைச்சர் ஆனால் எதுவுமே நடக்கவில்லை.

ஆனால் இன்று பதவிநிலை மாற்றமடைந்துள்ளதே தவிர ஆட்கள் மாற்றமடையவில்லை.எனவே அதே மனநிலை அதே நிலைப்பாடு அதே குழு இவர்களால் எப்படி தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.இது இன்னும் ஒரு கண்துடைப்பாகவே இருக்கும் என நான் கருதுகின்றேன்.

எனவே இதுவரை கடந்த 30 வருடங்களாக ஆட்சி செய்த எந்த ஒரு அரசாங்கமும் தமிழர் தரப்பு விடயங்களை இதய சுத்தியுடன் அனுகவில்லை என்பதே கசப்பான உண்மை.

ஆனால் இந்த அரசாங்கம் நினைத்தால் இந்த தமிழர் பிரச்சினைக்கு சரியான தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும்.காரணம் பெரும்பான்மை பலம் முக்கிய பதவிகளில் உள்ள அனைவரும் ஒரே குடும்ப அங்கத்தவர்கள்.ஒரு உணவு மேசையில் பேசி தீர்க்க முடியும்.ஆனால் அதனை செய்வார்களா?

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்