மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினர் வசம் உள்ள காணிகளில் பெரும்பாலானவற்றை விரைவாக வழங்கவுள்ளதாக தெரிவிப்பு.

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினர் வசம் உள்ள காணிகளில் பெரும்பாலானவற்றை விரைவாக வழங்கவுள்ளதாக தெரிவிப்பு!!
இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்துவது மற்றும் பொலிசார், படையினரிடம் உள்ள அரச மற்றும் தனியார் காணிகளை மீள கையளிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று (11) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின் போது கடந்த காலங்களில் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்துவது மற்றும் பொலிசார், படையினரிடம் உள்ள அரச மற்றும் தனியார் காணிகளை மீள கையளித்து மக்களது இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்வது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன் போது தனியார் காணிகள், கட்டிடங்கள், அரச காணிகள், அரச கட்டிடங்கள், ஆலயங்கள், பாடசாலைகள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடங்கள் போன்றவற்றில் சில இன்னமும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படாமை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மண்முனை வடக்கு, மண்முனைப்பற்று, களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, கோறளைப்பற்று மத்தி, கிரான் மற்றும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகளில் இன்னமும் தனியார் மற்றும் அரச காணிகளில் படையினர் நிலைகொண்டிருப்பதனால் மக்களது இயல்பு வாழ்வில் தடங்கள் இருப்பதாக பிரதேச செயலாளர்களினால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்போது பாதுகாப்பு படையினர் தம்வசம் உள்ள காணிகளில் பெரும்பாலான பகுதிளை இவ்வருட இறுதிக்குள் உரிய நபர்களிடம் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த கலந்துரையாடலில் 231 வது படைப்பிரிவின் பிறிக்கேட் கொமாண்டர் திலீப பண்டார, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி, காணிப்பிரிவிற்கான மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நே.விமல்ராஜ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, முப்படையினர் மற்றும் சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்களும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியவாறு கலந்துகொண்டிருந்தனர்.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கான மாநாட்டின் போது  உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்துதல், படையினரிடம் உள்ள அரச, தனியார் நிறுவனங்களின் காணிகள் மற்றும் கட்டடங்களை மீள கையளித்தல் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரெட்ண மற்றும் வெளிநாட்டு அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே இக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் இதன்போது தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.