சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தப்ப முயலும் அரசின் உபாயங்களுக்கு இடமளியோம்! ரெலோ உறுதி.
சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தப்ப முயலும் அரசின் உபாயங்களுக்கு இடமளியோம்!
ரெலோ உறுதி.

ஆகக் குறைந்தது பதின்மூன்றை நிறைவேற்றி மாகாண சபை அதிகாரப் பகிர்வை நிரந்தரமாக்கி நல்லெண்ணத்தை அரசு வெளிப்படுத்த வேண்டும்.
சர்வதேச மட்டத்தில் அரசாங்கம் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. புரட்டாதி மாத அமர்வில் 46/1 பிரேரணை மறுபரிசீலனை செய்யப்பட்டு கடுமையான அழுத்தங்களை அரசாங்கம் எதிர்கொள்ள இருக்கின்றது. பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்க வில்லை. முற்றாக நிராகரித்திருந்தது. இதனாலே மனித உரிமை பேரவைக்கு வெளியிலே சர்வதேச நாடுகள் அரசாங்கத்துக்கு பல்வேறு விதமான அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி வரிச்சலுகையை மறுபரிசீலனை செய்ய முற்பட்டுள்ளது. அமெரிக்க காங்கிரசில்
முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மறுபக்கம் நிறைவேற்றப்பட காத்திருக்கிறது. இது வெறும் ஆரம்பமே.
இந்த அழுத்தங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் பல்வேறுபட்ட தந்திரோபாயங்களை ஆலோசித்து வருகிறது. ஐநாவுடன் சேர்ந்து செயற்படுவதற்கு தாங்கள் தயார் என்று ஜனாதிபதி அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். பயங்கரவாதத் தடைச்சட்டம் அரச துஷ்பிரயோகத்திற்கே உதவுகிறது என சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன. அதை நீக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. அதை சமாளிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு குழு ஒன்று அமைத்து ஆராய்வதாக வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே தமிழரின் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துவோம் என்று அவரால் கூற முடியவில்லை. அல்லது எதிர்காலத்தில் தமிழர் நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என அறிவிக்க முடியவில்லை. ஏனெனில் தமிழ் மக்களுக்கு எதிரான சகலவிதமான திட்டங்களும் நடைபெறவே போகின்றன.
இப்படியான அரசியல் சூழலில்தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. எதைப்பற்றி அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த போகிறது என்ற தெளிவான கருத்துக்கள் வெளியிடப்படவில்லை. சர்வதேச மட்டத்தில் அரசுக்கு எதிராக உருவாகிவரும் பெரும் நெருக்கடிகளில் இருந்து தற்காலிகமாகவேனும் தன்னை விடுவித்துக் கொள்ள அரசாங்கம் பல்வேறு தந்திரோபாயங்களை மேற்கொள்ள முயற்சிக்கிறது. அதன் ஒரு வடிவமாகவே இதை நாங்கள் பார்க்கிறோம். ஒருபொழுதும் அரசாங்கத்தினுடைய இந்த முயற்சிக்கு நாம் துணை போக மாட்டோம். எம் மக்களை பலிக்கடா ஆக்கி சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் அரச முயற்சிக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
ஆகக் குறைந்த பட்சம் அரசமைப்பில் இருக்கும் 13ஆவது திருத்தச்சட்டத்தை முற்றுமுழுதாக நிறைவேற்றி மகாணசபைகளுக்கான அதிகாரங்களை நிரந்தரமாக்குவதன் மூலமே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு வழி கோல முடியும் என்று ரெலோ கருதுகிறது. நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும் அரசியல் யாப்பில் ஏற்படுத்தக்கூடிய சிறிய திருத்தங்களின் மூலமும் இதை அரசு நிறைவேற்ற முடியும். அதற்கான சகல தகுதிகளுடனும் பலத்துடனும் இன்று அரசு இருக்கிறது. சாதாரண பெரும்பான்மையே போதுமானது. இதற்கு இதயசுத்தியுடன் அரசு செயல்பட வேண்டியதே தேவையானது.
இந்த செயல்பாடு நல்லெண்ண நடவடிக்கையாக அரசு மேற்கொள்ளுமானால் பேச்சுவார்த்தைக்கான சாதகமான சூழ்நிலையை அது ஏற்படுத்தும். இது புதிய விடயமே அல்ல. ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கக்கூடிய எமது உரிமையை தான் நிறைவேற்ற நாங்கள் கோருகிறோம்.
துறைமுக நகர ஆணைக்குழுவிற்கு புதிய சட்டமூலத்தை நிறைவேற்றி அதிகாரங்களை வழங்கிய சீனாவிற்கு கையளித்த அரசினால் ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கும் 13ம் திருத்தத்தின் மூலம் மாகாண அதிகாரங்களை நிரந்தரமாக்க முடியும். நடைமுறைப்படுத்துவதில் சிரமம் இல்லை. தயக்கம் தயக்கம் காட்ட வேண்டிய அவசியமில்லை.
இதற்கு மேலாக அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகங்களின் செயல்பாடு, காணி அபகரிப்பு, தமிழர் தாயக நிர்வாகங்களில் சிங்கள நிர்வாகிகளின் நியமனம் என பல விடயங்களை அரசு செயல்படுத்திக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்கிறோம் என்பதில் என்ன அரசியல் நியாயம் இருக்கின்றது?
பேச்சுவார்த்தைக்கான இணக்கமான சூழ்நிலை ஒன்றுக்கு அரசு தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும். கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் கூட அரசியல் தீர்வு சம்பந்தமாக சர்வகட்சி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு 18 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தும் எந்த ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை. அதேபோன்று 13ஆம் திருத்தத்தை முற்றுமுழுதாக நிறைவேற்றி மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை நிரந்தரமாக்க தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தரப்பிலிருந்து என்னென்ன அரசியல் சாசன சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. அதற்காக தற்போதைய வெளிநாட்டு அமைச்சராக இருக்கும் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் அந்தக் குழுவினாலும் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இப்படியான பல அனுபவங்களை நாம் கடந்து வந்த பின்னரும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தவுடன் கூட்டமைப்பு ஓடி வந்து விடும் என்று அரசோ அல்லது வேறு தரப்புக்களோ கருதுவது வேடிக்கையானது.
பேச்சுவார்த்தை அவசியமானது. நாம் அதற்கு எதிரானவர்கள் அல்ல. அதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தி சாதகமான சூழலை ஏற்படுத்துவது அரசின் கடமை.
பேச்சுக்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை விடுத்து சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தை என்ற அரசாங்கத்தின் தந்திரோபாய நடவடிக்கைக்கு தமிழ் மக்களை பலியாக்க நாங்கள் ஒருபோதும் அனுமதியோம்.
சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்- ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு












கருத்துக்களேதுமில்லை