இரு வாரங்களில் இரண்டாவது தடுப்பூசி -முதலாவது தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது மிகவும் முக்கியமானது RDHS -ஜி; .சுகுணன்.

முதலாவது தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது மிகவும் முக்கியமானது. என தெரிவித்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜி; .சுகுணன் இரண்டாவது தடுப்பூசி ஏற்றி இருவாரங்களின் பின்னரே முற்றும் முழுதான பாதுகாப்பு எமக்கு கிடைக்கும் எனவும் குறிப்பி;ட்டார்.

பிரண்டினா நிறுவனத்தால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின்கீழ் இயங்கி வரும் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையில் இயங்கிவரும் கொவிட் 19 சிகிச்சை மற்றும் பராமரிப்பு நிலையத்திற்;கு உடனடி தேவையான ரூபா. 870,000 பெறுமதியான மருத்துவ மற்றும் மருத்துவம்சாரா உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்
மேலும் தெரிவிக்கையில்

கல்முனை பிராந்தியத்தில் இதுவரை 4 ஆயிரம் கொவிட் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. டெல்டா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி வரும் நிலையில் குறித்த அதிகரிப்பானது அவதானத்துக்குள்ளாகியுள்ளது. இதனை தடுப்பதற்கான முயற்சியினை பொதுமக்களும் அரச திணைக்களங்களும் சுகாதாரத்துறையினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றோம்.

இந்நிலையில் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையில் அமைந்துள்ள கொவிட் பராமரிப்பு நிலையத்திற்கு பிரண்டினா நிறுவனம் ஒரு தொகுதி மருத்துவ மற்றும் மருத்துவம்சாரா உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது. சகல வைத்தியசாலைகளிலும் இடங்களிலும் சுகாதார உபகரணங்கள் மற்றும் ஆளனி பற்றாக்குறையும் நிலவுகின்ற இச்சந்தர்ப்பத்தில் கொவிட்டை வெல்வது கடினமாக காணப்பட்டது. இந்நிலையில் பிரண்டினா போன்ற நிறுவனங்களின் உதவி சுகாதாரத்துறையினருக்கு உற்சாகம் அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளதாக நான் பார்க்கின்றேன். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். இவர்கள் போன்று பொது அமைப்புக்களும் இணைந்து கைகோர்த்து செயற்படுவதை வரவேற்கின்றேன்.

மேலும் எமது பிரதேசத்தில் நேற்று மாத்திரம் 151 நோயாளர்கள் இனங்காணப்பட்டதுடன் இரு மரணங்களும் சம்பவித்துள்ளன. ஆகவே மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

அத்தோடு தடுப்பூசி ஏற்றிகொள்வதற்கு மக்கள் முன்வரவேண்டும் எனவும் கல்முனை பிராந்தியத்தை பொறுத்த மட்டில் 30 வயதிற்கும் மேற்பட்ட 91 வீதமான மக்கள் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார். இதேநேரம் எதிர்வரும் இரு வாரங்களில் இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றும் முதலாவது தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது மிகவும் முக்கியமானது எனவும் கூறினார். இரண்டாவது தடுப்பூசி ஏற்றி இருவாரங்களின் பின்னரே முற்றும் முழுதான பாதுகாப்பு எமக்கு கிடைக்கும்.

பிழையான தகவல்களை வெளியிடும் முகநூல் மற்றும் வட்சப் பதிவுகள் வதந்திகளை நம்பாது அவற்றை தூக்கியெறிந்து விட்டு சுகாதாரத்துறையின் மீது நம்பிக்கை வைத்து விஞ்ஞான ரீதியாக உறுதி செய்யப்பட்ட தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதன் மூலமே இப்பேரிடரில் இருந்து மீண்டு சாதரணமான வாழ்க்கைக்குள் நாம் செல்ல முடியும் என்றும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.