தலைக்கு மேலால் ஓடுகிறது வெள்ளம் : தங்களை காப்பாற்ற மக்களே சுயமுடிவை எடுத்து தாமாக முடங்க வேண்டும்…

நாட்டில் கொழுந்துவிட்டு எரியும் கொரோனா பற்றி நீங்கள் அனைவரும் அறிவீர்கள். கல்முனை பிராந்தியத்திலும் தொற்று நிலைமை மிகமோசமாக பரவிக் கொண்டிருக்கின்றது. கடந்த 24 மணித்தியாலத்திற்குள் ஆறு நபர்கள் மரணித்து விட்டிருக்கிறார்கள். ஒரு பிரதேசத்தின் அபாய நிலைமையை மரணத்தின் எண்ணிக்கை  மூலமே அறியக்கூடியதாக இருக்கும். மற்ற பிராந்தியங்களுடன் ஒப்பிடும் பொழுது கல்முனைப் பிராந்தியத்தின் மரண வீதம் நான்கு மடங்காக காணப்படுகின்றது. பொதுமக்களும் நோயாளிகளும் பரிசோதனைகளை செய்ய மறுத்து ஓடி ஒழிவதனாலும் சில அதிகாரிகள் தமது சமூகத்தைப் பாதுகாக்கிறோம் என்ற போலியான நிலைப்பாட்டுடன் இயங்குவதாலும் நாம் எவ்வளவு தூரம் செயற்பட்டாலும் இந்த பாரிய தொற்று நிலமையினை கட்டுப்படுத்த முடியவில்லை. என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

அவரது அறிவிப்பில் தொடர்ந்தும், இனவாதத்தையும் பிரதேச வாதத்தையும் இருக்கின்ற எல்லா வாதங்களையும் நீங்கள் கூவிக்கூவி உங்களையும்  நீங்கள் சார்ந்த சமூகத்தையும் ஏமாற்றுகிறீர்கள். 40 ஆயிரம் பொதுமக்கள் 60 வயதை தாண்டியவர்கள் இருப்பினும் இதில் கிட்டத்தட்ட 5 தொடக்கம் 10 ஆயிரம் வரையான பொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவில்லை. இன்றுவரை அவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டார்கள். சுகாதாரத் துறையை பொறுத்த வரையில் அனைவரும் மிகவும் களைப்படைந்து இருக்கின்றார்கள். தற்பொழுது இருக்கும் ஆயிரம் நோயாளிகளில் 425 நோயாளிகளை மட்டும் தான் வைத்தியசாலைகளில் வைப்பதற்குரிய கட்டில் காணப்படுகிறது மிகுதி 575 நோயாளிகள் வீட்டிலேயே இருக்கிறார்கள்.

எங்களிடம் இப்பொழுது வைத்தியசாலைகளில் நோயாளிகளை வைத்துப் பார்ப்பதற்கு போதியளவான கட்டில்கள் இல்லை. உபகரணங்கள் இல்லை. உயிரை காக்கின்ற ஒட்சிசன் கூட நாளை இருக்குமா என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓயாது நாங்கள் உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் இங்கு பொதுமக்களோ எந்தவிதமான சிந்தனையுமின்றி சந்தோசமாக உலாவிக்கொண்டிருக்கிறார்கள். எங்களில் பலபேர் உங்களை காப்பாற்ற போய் கொவிட் நோயாளிகளாக சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
இப்பொழுதாவது விபரீதத்தை உணர்ந்து கொண்டு உங்கள் பிரதேசங்களை நீங்களாக முடக்கி கொள்ளுங்கள். வர்த்தக சங்கங்கள், உள்ளூராட்சி சபைகள், கோவில்கள், பள்ளிவாசல்கள், அமைப்புக்கள் உடன் செயற்படுங்கள்.

பொதுமக்களே ! நீங்கள் ஒவ்வொருவரும் வீட்டினுள் முடங்கிக் கொள்ளுங்கள். அல்லது அழிவுகளை நாம் பார்த்து கண்ணீர் வடித்தவர்களாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வக்கற்றவர்களாக பிணக்குவியல்களை கடந்து செல்லவேண்டி ஏற்படும் என்ற எச்சரிக்கையை முன்வைத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.