கால சூழ்நிலையை அறிந்து ஒத்துழைத்து மக்கள் விழிப்புடன் அவதானமாக வீட்டில் இருங்கள் : அனர்த்த முகாமைத்துவ அணி வேண்டுகோள் !

நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணி ஊடாக வழிப்புணர்வு நிகழ்வு நிந்தவூர் பூராகவும் இடம்பெற்று வருகின்றது. நிந்தவூரில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கியுள்ளது. தினமும் கொரோனா மரணம் விழும் ஒரு ஊராக நிலை மாறிக் கொண்டிருக்கின்றது. இதுவரை 15 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டை இழந்து 500 ஐ எட்டிக் கொண்டிருக்கின்றது. தொடர் பரிசோதனையில் பலர் தொற்றாளர்களாக நாளாந்தம் இனங்காணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதிகரித்துவரும் கொரோனா மரணம் மற்றும் தொற்றினை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத் துறை கதிகலகங்கிப் போயுள்ள தருணமிது. கொரோனா தொற்றளர் தொகை தினமும் அதிகரிப்பதன் காரணமாக வைத்தியசாலைகள் இட நெருக்கடியியையும் ஊழியர் பற்றாக் குறையினையும், ஒட்சிசன் வாயுவின் தட்டுப்பாட்டையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. என நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவித்தலில் மேலும்,

அதிகரித்துவரும் மரணம் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக நிந்தவூர் பிரதேசம் அதிக தொற்று ஆபத்துள்ள சிவப்பு எச்சரிக்கை வலயமாக அறிவிக்கப்பட்டு முற்றாக முடக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே எதிர்நோக்கிவரும் ஆபத்தான சூழ்நிலையிலிருந்து எம்மைப் பாதுகாக்கவும், நாம் இப்போதிருக்கும் நிலையிலிருந்து மீளவும், சுகாதாரப் பிரிவினரின் வழிகாட்டல்களை இறுக்கமாகப் பேணி நடக்குமாறு வேண்டுகின்றோம். எனவே அரசு அங்கீகரித்த அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும், வெளியே செல்லுமாறும், மாஸ்கை (மூக்கையும் வாயையும் மூடி) முறையாக அணியுங்கள். குறிப்பாகப் பெண்களும் கட்டாயம் மாஸ்க் அணியுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் பொது இடங்களில் சமூக இடைவெளிகளை இறுக்கமாகக் கடைப்பிடிப்பதுடன், சிறுவர்கள், வயோதிபர்கள், நாட்பட்ட நோயாளிகள் எக்காரணம் கொண்டும் வெளியே செல்வதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள், மாணவர்களை ஒன்றுகூட்டி ஆசிரியர்கள் வகுப்புக்கள் நடத்துவதையும், பெற்றோர் வகுப்புகளுக்கு பிள்ளைகளை அனுப்புவதையும் இவ் இக்கட்டான சூழலில் கட்டாயம் தவிர்ந்து கொள்ளுங்கள்., வெளியூரிலிருந்து (குறிப்பாக கொழும்பிலிருந்து) வருபவர்கள் தன்னை முறையான பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன், சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுங்கள், 60 வயதுக்கு மேற்பட்டும் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உடன் போட்டுக் கொள்ளுங்கள்.

குடும்ப ஒன்று கூடல்கள், மரண வீடுகளில் ஒன்று கூடுவது, வீதிகளில் ஒன்று சேர்ந்து நிற்பது, கூட்டமாக பயணிப்பது போன்ற விடயங்களை கட்டாயமாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள், பொருள் விற்பனையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் உரிய சுகாதார ஒழுங்கில் பொருள் கொள்வனவு மேற்கொள்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள், உரிய சுகாதார ஒழுங்குகளைப் பேணாத தனிநபர்கள், விற்பனை நிலைய உரிமையாளர்கள் மற்றும் சமூகம் ஒன்று கூடும் இடங்களின் பொறுப்பாளர்கள் தங்கள் மீது சட்டரீதியான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

கொரோனா நோய் அடையாளம் உள்ளவர்கள் அதை மறைக்காமல் உடன் வைத்தியசாலையை நாடுங்கள். எமது வைத்தியசாலையில் சிகிச்சை செய்வதற்கான சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.. நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் உங்கள் உயிருக்கு ஆபத்தாகலாம் எனவே மேற்படி விடயங்களில் கூடிய அவதானத்தை செலுத்தி நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இது காலவரை மரணம் நெருங்கியவர்கள் நம் கண் எதிரே ஸகராத்தைச் சந்தித்தார்கள். கடைசி கட்டத்தில் நாம் அருகில் இருந்து கலிமா சொல்லிக் கொண்டிருந்தோம். மரணித்தால் நாம் அடிக்கழுவி எல்லோரும் ஜனாஸாவைப் பார்த்து பின் குளிப்பாட்டி, கபனிட்டு, ஊரவர் ஒன்று சேர்ந்து தொழுவித்து அடக்கம் செய்தோம். அடக்கிய பின் கூடி நின்று துஆ செய்தோம். கொரோனாவில் மரணித்தால் இவை எதுவும் முறையாக நமக்கு நடக்காது. யாரையும் யாரும் பார்க்கவோ, அருகில் கூட நெருங்கவோ முடியாது. கண் காணாத பிரதேசத்தில் அல்லவா எம் ஜனாசாக்கள் அடக்கப்படும். இந்நிலை நமக்கு வேண்டுமா ?  அலட்சியமாகவும், அஜாக்கிரதையாகவும் இருந்தால் கொரோனாவிலிருந்தும் தப்ப முடியாது. எனவே சுகாதார நடைமுறைகளை மிக இறுக்கமாகப் பேணி தம்மையும், தம் வீட்டையும், ஊரையும், நாட்டையும் காக்க முன்வருமாறு வேண்டுகின்றோம். அத்துடன், நோன்பு பிடித்து, தொழுது, தர்மம் செய்து, அழுது அல்லாஹ்விடம் மன்றாடுமாறும் வேண்டுகின்றோம் என குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்