காரைதீவு பிரதேச சபை அமர்வில் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் இடைநடுவில் சபையை விட்டு வெளியேறினார் தவிசாளர் ஜெயசிறில் !

போதியளவு வருமானமில்லாமையினாலும், மக்களின் வரிப்பணம் வீணாக புகையாகிக் கொண்டிருப்பதனாலு ம், சிறிய பரப்பளவை கொண்ட காரைதீவு பிரதேச சபை எல்லையினுள் 500 லீட்டர் எரிபொருள் என்பது கூடுதலான தொகை என்பதனாலும் காரைதீவு தவிசாளரின் வாகனத்திற்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வரும் எரிபொருள் கொள்ளளவில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீர் கொண்டுவந்த பிரேரணை பல்வேறு கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் ஒரு மேலதிக வாக்கினால் வென்றது என பிரதேச சபை உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு சபை அமர்வு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தனர்.

காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபையின் தவிசாளர் கி. ஜெயசிறிலின் தலைமையில் இன்று (23) காலை சபா மண்டபத்தில் இடம்பெற்றபோது குறித்த பிரேரணை அடங்களாக பல்வேறு பிரேரணைகள் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் சபை அமர்வை 15 நிமிடங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் பணித்ததாக கூறி விரைவாக சபையமர்வை முடிக்க தவிசாளர் எத்தணித்த போது பிரேரணைகளை ஒத்திவைக்க கோரிய உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீருக்கும் தவிசாளருக்குமிடையே வாய்த்தர்க்கம் உண்டானதாகவும் அதன்பிரகாரம் திண்மக்கழிவகற்றும் ஊழியரை கொண்டு பஸ்மீரை சபையை விட்டு வெளியேற்ற தவிசாளர் பணித்த போது சபை அமர்வில் கூச்சல் குழப்பம் உண்டானதாகவும் நீண்ட குழப்பத்தின் பின்னர் சபை சுமூக நிலையை அடைந்தது. அதன் பின்னர் இடம்பெற்ற காரைதீவு தவிசாளரின் வாகனத்திற்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வரும் எரிபொருள் கொள்ளளவில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் எனும் பஸ்மீரின் பிரேரணை பிரதேச சபை உப தவிசாளர் ஜாஹீர் வழிமொழிய தவிசாளர் எதிர்ப்பை வெளியிட்டார்.

யாருக்கும் கருத்து தெரிவிக்கும் வாய்ப்பு வழங்கப்படாமல் நேரடியாக வாக்களிப்புக்கு சென்ற பிரேரணையை எதிர்த்து தவிசாளர் ஜெயசிறில் உட்பட ஐவர் வாக்களித்தனர். பிரேரணையை ஆதரித்து உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர், ம.கா உறுப்பினர் முஸ்தபா ஜலீல், சுயட்சை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீர், மு.கா உறுப்பினர் எம்.எச்.எம். இஸ்மாயில், சுயட்சை உறுப்பினர் க. குமாரஸ்ரீ, சுதந்திர காட்சி உறுப்பினர் ஜெகன் ஆகியோர் வாக்களித்தனர். மு.கா உறுப்பினர் எம்.என்.எம். றணீஸ் தனக்கு கருத்து கூற வாய்ப்பு தராத காரணத்தினால் நடுநிலை வகிப்பதாக அறிவித்தார். இதன் மூலம் ஒரு மேலதிக வாக்குகளினால் பிரேரணை வெற்றிபெற்று தவிசாளரின் வாகனத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் கொள்ளளவில் மாற்றத்தை கொண்டுவர தீர்மானம் எடுக்கப்பட்டது.

வாகன சாரதிக்கான மேலதிக நேர கொடுப்பனவு சம்பந்தமான பிரேரணை, கடந்த மாத கணக்கறிக்கை என்பனவற்றுக்கும் பதிலளிக்காமல் சபை அமர்வில் உறுப்பினர்களின் சரமாரியான கேள்விகளினால் இடம்பெற்ற அசாதாரண நிலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய தவிசாளர் இடைநடுவில் சபை அமர்வை கைவிட்டு தப்பியோடினார் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது உபதவிசாளர் ஏ.எம். ஜாஹீர், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம். பஸ்மீர், முஸ்தபா ஜலீல் ஆகியோர் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.