பொருட்களின் விலை அதிகரிப்பினால் பணவீக்கம் அதிகரிப்பு !

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 ஜூன் மாதம் 6.1 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஜூலையில் 6.8 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது.

உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் குறித்த பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதற்கமைய, உணவுப் பணவீக்கம் ஜூன் மாதமிருந்த 9.8 சதவீதத்திலிருந்து ஜூலையில் 11.0 சதவீதத்திற்கும் உணவல்லாப் பணவீக்கம் 2.9 சதவீதத்திலிருந்து ஜூலையில் 3.2 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணும் 2021 ஜூலையில் 5.4 சதவீதமாக எவ்வித மாற்றமின்றிக் காணப்பட்டது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது, 2021 யூலையில் 0.63 சதவீதத்தினைப் பதிவுசெய்தது.

இதற்கு, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன.

மேலும், உணவு மற்றும் உணவல்லா வகைகளின் மாதாந்த மாற்றங்கள், முறையே 0.37 சதவீதத்தினையும் 0.27 சதவீதத்தினையும் பதிவுசெய்தன.

அதற்கமைய, உணவு வகையினுள் சீனி, காய்கறிகள், கருவாடு மற்றும் உடன் மீன் என்பவற்றின் விலைகள் அதிகரித்த அதேவேளை தேய்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலைகள் வீழ்ச்சிகளைப் பதிவுசெய்தன.

மேலும், உணவல்லா வகையினுள் பிரதானமாக போக்குவரத்து (பெற்றோல் மற்றும் டீசல்) மற்றும் உணவகம் அத்துடன் விடுதிகள் துணை வகைகளில் மாதகாலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக அதிகரிப்பொன்று பதிவாகியது.

மேலும், ஆண்டிற்கு ஆண்டு மையப் பணவீக்கம், 2021 ஜூனின் 4.1 சதவீதத்திலிருந்து ஜூலையில் 4.4 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம் இந்த ஆண்டு ஜூலையில் 4.4 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.