ஊருக்கு துரோகம் இழைப்பவர்கள் வெளியேறவேண்டும்! காரைதீவு சுயேச்சைக்குழு ஸ்தாபக உறுப்பினர்கள் வேண்டுகோள்…

(வி.ரி.சகாதேவராஜா)

மண்ணையும், மக்களையும் காப்பாற்றுவேன் ,ஊருக்கும் எமது குழுவுக்கும் கட்டுப்படுவேன் என்று கூறிச்சென்ற உறுப்பினர் குமாரசிறி ,தற்போது ஊருக்கும் குழுவுக்கும் கட்டுப்படாமல் மாற்றானுடன் கைகோர்த்து காட்டிக்கொடுத்து ஊரை தாரைவார்த்துக்கொடுக்க முற்பட்டுள்ளார். உடனடியாக அவர் வெளியேறவேண்டும்.


இவ்வாறு காரைதீவு மீன்சின்ன சுயேச்சைக்குழுவின் ஸ்தாபக சிரேஸ்ட உறுப்பினர்கள் சார்பாக வெ.ஜெயகோபன் வெ.வேற்குமரன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அவர்களது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

சபையில் ,மாற்றானுடன் சேர்ந்து வித்தகன் பிறந்த இந்த புனிதபூமியின் கௌரவத்தை கெடுத்துக்கொண்டிருக்கும் அவர் இன்னமும் சபையில் இருக்கவேண்டிய அவசியமில்லை. வரலாற்றில் கறை படிந்த அத்தியாயத்தை தோற்றுவித்துள்ளார்.

இத்தனைக்கும் அவர் மக்கள் வாக்குகளால் நேரடியாக வென்றுவந்தவர் அல்ல. சுழற்சிமுறையில் வழங்கப்படவேண்டிய அப்பதவியை அவர் கெஞ்சிக்கேட்ட காரணத்தினால் வழங்கினோம்.

2018உள்ளுராட்சித்தேர்தலில் ஊர்இறைமை கருதி தன்மானத்தமிழர்களின் இருப்பைப்பாதுகாக்கவேண்டி ஊர் ஒன்றுகூடி சுயாதீனமாக குதித்து இரு ஆசனங்களை பெற்றோம். அதற்காக சுயேச்சை அணியின் தலைவர் வேட்பாளர்கள் பேச்சாளர்கள் தொடக்கம் உறுப்பினர்கள் அடிமட்டத்தொண்டர்கள் வரை செய்த தியாகம் அளப்பரியது.
 
அப்படிக்கிடைத்த இருஆசனங்களை சுழற்சிமுறையில் வழங்க பகிரங்கமாக தீர்மானமெடுத்து தற்போது இரண்டாவது இருவர் பதவியிலுள்ளனர். அவர்களில் ஒருவரான குமாரசிறி எமது கிராமத்தின் எதிர்பார்ப்புகளை வீணாக்கி குழுகூட்டிய கூட்டத்தையும் அலட்சியம் செய்து தான்தோன்றித்தனமாக மாற்றானுடன் கைகோர்த்து துரோகத்தனமாக கூட்டிக்கொடுத்துவருகிறார்.

இவரை அனுப்பியது தனிப்பட்ட ஜெயசிறிலை எதிர்க்கவோ  அல்லது த.தே.கூட்டமைப்பை எதிர்க்கவோ அல்லது ஊரை பொதுவெளியில் விற்கவோ அல்ல.

ஒரு கட்டத்தில் சுழற்சிமுறையில் தனக்கு கிடையாதோ என்றெண்ணி சுயேச்சைக்குழுத்தலைவரையும் குழுவையும் மிகவும் தரக்குறைவாக முகநூலில் பதிவிட்டிருந்தார்.

அவருக்கு நாம் வழங்கிய இரவல் பாத்திரத்தை வைத்துக்கொண்டு இன்று வளர்த்த கடா மார்பில் பாய்வதைப்போல ஊரையே எதிர்த்து தாரைவார்க்க சதிசெய்கிறார். இதற்கு தன்மானமுள்ள காரைதீவுமக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். அவர் இந்த துரோகத்தனத்திலிருந்து விடுபட்டு உடனடியாக பதவிவிலகி ஏனையோருக்கு வழிவிடவேண்டும். இன்றேல் மக்களாகிய நாம் தகுந்த பாடம் கற்பிப்போம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.