கொவிட் தரவுகளே பொய்யென்றால் இறுதிய யுத்த தரவுகளை எவ்வாறு நம்ப முடியும்…? (பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி)

கொவிட் நோயளிகளின் தரவுகளிலேயே அரசாங்கம் இவ்வாறு முரண்பாடாக விபரங்களை வெளியிடுகின்றதென்றால். இதே அரசாங்கத்தின் காலத்தில் வெளியிடப்பட்ட இறுதி யுத்தத்திலே இறந்தவர்கள், யுத்த காலத்தில் கொல்லப்பட்டவர்களின் புள்ளி விபரங்களை எவ்வாறு நம்ப முடியும்? என தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது ஏற்படுகின்ற கொவிட் தொற்றின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நோயளர்களின் எண்ணிக்கை இலங்கையின் சுகாதார அமைச்சின் கொவிட் பிரிவினால் வெளியிடப்படுகின்றது. அதில் மட்டக்களப்பு பிராந்தியத்தில் கொவிட் மூன்றாவது அலையின் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4011 ஆகவும், கல்முனை பிராந்தியத்தில் 2602 ஆகவும், திருகோணமலையிலே 2906 ஆகவும் காட்டப்படுகின்றது. மொத்த தொற்றாளர்களாக மட்டக்களப்பில் 4811, கல்முனையில் 3916, திருகோணமலையில் 3561 என்று கொழும்பில் இருந்து வெளியாகும் சுகாதார அமைச்சின் கொவிட் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் உரிய பிராந்தியங்களில் இருந்து வெளியிடப்படும் தரவுகளைப் பார்த்தால் கொவிட் மூன்றாவது அலையிலே மட்டக்களப்பில் 14882 தொற்றாளர்கள், கல்முனையில் 4761, திருகோணமலையிலே 3516 தொற்றாளர்கள். இது மூன்றாவது அலையில் மாத்திரம். கொழும்பில் காட்டப்படுகின்ற தரவுகளுக்கும் மாவட்ட ரீதியான தரவுகளுக்கு சுமார் மூன்று மடங்கிற்கும் குறைவான தரவுகள் காட்டப்படுகின்றன.

அதேபோல் கொவிட் மரணங்களைப் பார்த்தோமானாலும், 2021.08.26ம் திகதிய தரவின் படி மட்டக்களப்பில் 24 மணிநேரத்தினுள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10, திருகோணமலையிலே 07, கல்னையில் 01 என்று காட்டப்பட்டுள்ளது. இதனை நாங்கள் நம்ப முடியுமா?

நோயாளிகளின் எண்ணிக்கையில் பொய்யான தரவுகள் வெளியிடுகின்றார்கள் என்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை எவ்வாறு உண்மையானது என நம்ப முடியும்? கொவிட் நோயளிகளின் தரவுகளிலேயே இவ்வாறு என்றால் இறுதி யுத்தத்திலே இறந்தவர்கள், யுத்த காலத்தில் கொல்லப்பட்டவர்களின் புள்ளி விபரங்களை நாங்கள் எவ்வாறு நம்புவது? இதே அரசாங்கம் தான் அந்த நேரத்திலும் இருந்தது.

இந்த உயிரிழப்புகள் அனைத்துக்குமான காரணம் தடுப்பூசி உரிய காலத்தில் வழங்காமை. உண்மையில் இலங்கையில் 88 வீதமானவர்களின் இறப்பு இரு தடுப்பூசிகளையும் பெறாதவர்களாகவே இருக்கின்றனர். 12 வீதமானவர்களே இரு தடுப்பூசிகளையும் பெற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை. இவ்வாறு இருக்கும் போது கல்முனை பிராந்தியத்தில் இதுவரை கிடைத்த இரண்டாவது தடுப்பூசியின் விகிதாசாரம் பூச்சியம், அதேபோல் திருகோணமலையிலும் பூச்சியமாகவே இருக்கின்றது. மட்டக்களப்பில் மாத்திரம் இரண்டாவது தடுப்பூசி 32 வீதம் கிடைத்திருக்கின்றது.

ஜனாதிபதி என்பவர் நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொதுவான தலைவராக இருக்க வேண்டும். ஆனால் மேல் மாணத்திலுள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற அவரின் குறுகிய நோக்கத்திற்காக அதுவும் அந்த மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அல்ல பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு நாணய மதிப்பினைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அது வழங்கப்பட்டது. அதற்காக ஏனைய மாகாணங்களில் இருக்கின்ற குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற எத்தனையோ பேரை இன்று நாங்கள் இழந்திருக்கின்றோம்.

மட்டக்களபபில் 202, 225 போர் திருகோணமலை மாவட்டத்தில், கல்முனையில் 140 பேரை நாங்கள் இழந்திருக்கின்றோம். இந்த உயிர்களுக்கெல்லாம் யார் பொறுப்பு. மேல்மாகாணத்தில் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாணத்திற்கு இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படவில்லை. கிழக்கைப் பாதுகாக்கப் போகின்றோம் என்று வந்தவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்.

தடுப்பூசிகள் தொடர்பில் நாங்களும் எங்களாளான அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம் எதிர்வரும் வாரமளவில் தடுப்பூசிகள் வரலாம் என்று எதிர்பார்க்கின்றேன். தினமும் உரிய தரப்பினருக்கு கடிதங்கள் மூலம் நிலைமைகளைத் தெரியப்படுத்துகின்றோம். கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து மக்களுக்காகவும் தொடர்ச்சியாக நாங்கள் இந்த விடயங்களைக் கையாளுகின்றோம். ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் பேசியே தடுப்பூசிகளைக் கொண்டு தரலாம். ஆனால் இதுவரைக்கும் ஒரு அறிக்கையின் ஊடாகக் கூட மக்களின் பாதுகாப்பைப் பற்றி சொல்லாதவர்கள் தான் இவர்கள்.

எமது மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சொல்லுகின்றார் இந்த நாட்டை முடக்குவதால் பொருளாதாரம் பாதிக்கும் என்று. ஜனாதிபதி தன் சுயநலத்திற்காக மேல்மாகாணம் முடக்கப்பட்டால் ஆடைத் தொழிற்சாலைகளை முடக்கினால் பொருளாதாரம் அடிபடும் என்று சொல்லுகின்றார். ஆனால் ஜனாதிபதி சொல்லுகின்றார் என்பதற்காக இவரும் அதேபாணியில் சொல்கிறார் என்றால் என்னவென்று சொல்வது.

இன்றும் இந்த முடக்கம் என்பதும் ஒரு போலியான முடக்கம் தான். சுமார் 25 இலட்சம் பேர் தினமும் வேலைக்குச் சென்று வீடு திரும்புகின்றார்கள் என்றால் இந்த முடக்கத்தில் என்ன பலாபலன் கிடைக்கப் போகின்றது. இதைவிடுத்து இரண்டு வாரங்கள் முழுமையாக அனைத்தையும் முடக்கியிருந்தால் இந்த கொவிட் தொற்றினையும் பாதுகாத்திருக்கலாம், எமது நாட்டின் பொருளாதாரத்தையுமு; பாதுகாத்திருக்கலாம்.

கடந்த ஐந்தாம் மாதமளவில் பயணத்தடை என்ற பெயரில் மூன்ற வாரங்கள் வைத்திருந்தார்கள். அந்த நேரம் முழுமையாக நாட்டை முடக்கியிருந்தால் இந்தப் பி;ரச்சினை வந்திருக்காது. இன்று இத்தனை பேரை நாங்கள் இழந்திருக்க மாட்டோம். மட்டக்களப்பில் இறந்த 202 பேரின் குடும்பங்களுக்கும் எமது மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பொறுப்புக் கூற வேண்டும்.

தற்போது ஐயாயிரம் ரூபா வழங்கப்பட்ட விடயம் 2000 ரூபாவாக வழங்கப்படுகின்றது. இந்த 2000 ரூபாவில் என்ன வாங்க முடியும். தற்போது பொருட்களின் விலைகளின் போக்கிற்கு வழங்கப்படும் இரண்டாயிரத்தில் எதுவுமே வாங்க முடியாது. வெறுமனே மக்களை ஏமாற்றும் திட்டமாகவே அது இருக்கும்.

கிழக்கை மீட்கப் போகின்றோம், வேலைவாய்ப்பினை உருவாக்கப் போகின்றோம். கிழக்கில் அபிவிருத்தி செய்யப் போகின்றோம் என்று வந்தவர்கள் இன்று வரையும் எதனையும் உருவாக்க முடியாமல் போயுள்ளது. இன்றைய நிலையில் கொவிட் மரணமொன்று நிகழ்ந்தால் அதற்கான பொலித்தீன் பைகூட மக்கள் தான் வாங்கிக் கொடுக்க வேண்டி நிலைக்கு இன்று வந்துவிட்டது. இது மட்டக்களப்பிற்கு பெரும் அபாயமான நிலை.

ஆனால் கொழும்பு போன்ற பகுதிகளில் கொவிட் மரணங்களை அடக்கம் செய்வதற்காக காட்போட் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்பேட்டைகளை அமைத்திருக்கின்றார்கள். கிழக்கை மீட்க வந்தவர்கள் ஆகக் குறைந்தது இந்த தொழிற்சாலையையாவது மட்டக்களப்பில் அமைத்து ஒரு சிலருக்கு வேலைவாய்ப்பினைக் கொடுங்கள். ஆனால் இவர்களின் நண்பர்களின் மரவியாபாரம் கெட்டுவிடும் என்பதால் அதனையும் இவர்கள் செய்ய மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.