தற்போதைய நிலையில் 2000 ரூபாவிற்கு மேல் வழங்க முடியாது – கஸ்டத்தில் அரசாங்கம்…

ஊரடங்கு உத்தரவின் போது வாழ்வாதாரத்தை இழக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 2000 ரூபா உதவித்தொகை போதுமானதாக இல்லை என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

எனினும், அரசாங்கம் எதிர்கொள்ளும் பெரும் நிதி நெருக்கடியால், இந்தத் தொகையை விட அதிகமாக வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கொரோனாவின் கடந்த கால பாதிப்புகளின் போது தலா 5,000 ரூபா ஏராளமான குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அதற்காக சுமார் 80 பில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் இதுபோன்ற நிவாரணங்களை வழங்குவதற்கு நாட்டின் பொருளாதாரம் வலுவாக இல்லை என்றும் ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டியுள்ளார்.

நெருக்கடிக்கு மத்தியில், அரச நிறுவனங்களின் செலவுகள் முடிந்தவரை மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று நிதி அமைச்சு அனைத்து அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கடுமையான கட்டளைகளை பிறப்பித்துள்ளதாகவும் அதனை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்