சிறப்பாக நடைபெற்ற ‘பாலை வானம்’ நூல் வெளியீட்டு விழா.

சிறப்பாக நடைபெற்ற ‘பாலை வானம்’ நூல் வெளியீட்டு விழா
ஈழத்தின் மூத்த தமிழறிஞரும், பன்னூலாசிரியருமான முத்தமிழ் ஞானி ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா (ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா) இயற்றிய, ஐந்குறுநூறில் வரும் பாலைப் பாடலுக்கான விளக்கவுரை நூலான ‘பாலை வனம்’ நூல் வெளியீட்டு விழா உலகளாவிய ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் அங்கமான ஏகத்துவ மெய்ஞ்ஞானத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் (28) சனிக்கிழமை மாலை  zoom செயலியூடாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவுக்கு  zoom செயலியூடாகவும் இணைய வழியாக நேரடியஞ்சல் மூலமாகவும் உலகின் பல பாகங்களில் இருந்தும் 700 இற்கு மேற்பட்ட  தமிழ் ஆர்வலர்கள் உட்பட தமிழ்ச் சங்கங்கள் இணைந்து சிறப்பித்தனர்.

 தமிழ்நாடு திருமுல்லைவாசலைச் சேர்ந்த அஸ்ஸெய்யித் மஷ்ஹுத் மௌலானா அல்-ஹாதியின் தலைமையில் விழா ஆரம்பமானது, வரவேற்புரை ஏகத்துவ மெய்ஞ்ஞானத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் கவிஞர் கிளியனூர் இஸ்மாத், இறை வாழ்த்துப்பாடலும் விழா அறிமுகவுரையும் சங்கத்தின் தலைவர் கலீபா, ஆலிம் புலவர் எஸ். ஹுஸைன் முஹம்மது மன்பஈயாலும் நிகழ்த்தப்பட்டது. விழாத் தொகுப்பாளராக சென்னை புதுக்கல்லூரியின் தமிழ்த்துரைப் பேராசிரியர் முரளி அரூபன் விழாவை சுவாரசியமாகவும் சிறப்பாக நெறிப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, பன்னாட்டுத் தமிழ் மன்ற உலக அமைப்பாளர் கவிமாமணி, முனைவர் பெருங்கவிக்கோ  வா.மு. சேதுராமன் வாழ்த்துரையாற்றினார். தனதுரையில் மௌலானாவின் பாலை வானம் நூலின் முன்னுரையை மேற்கோள்காட்டி அதில் ‘முற்காலத் தமிழ் எவ்வாறிருந்தது என்பதை அறிந்து கொள்வதற்காகவும், அச்சொற்களை இன்றைய மக்கள் உபயோகிப்பதற்காகவும் அதற்குப்  பல்லுடைக்கும் மொழிகள் என்ற பழிச்சொல் நீங்கவே இவ்வாறு எழுதினோம்’ எனும் கூற்றை சிலாகித்தும் விபரித்தும் வாழ்த்தினார்.
தொடர்ந்து, நூலாசிரியர் கலீல் அவ்ன் மௌலானா பற்றிய அறிமுகக் காணொளியொன்று திரையில் காட்சிப்படுத்தப்பட்டு, தொடர்ந்து    zoom  காணொளியூடே தமிழ்நாடு திருமுல்லை வாசலில் இருந்து நூல் வெளியீடு இடம்பெற்றது. நூலை விழாவுக்கு தலைமை தாங்கிய அஸ்ஸெய்யித் மஸ்ஊத் மௌலானா அல்-ஹாதி ‘பாலை வனம்’ நூலை வெளியிட்டு தலைமையுரையாற்றினார். நூலின் முதற் பிரதியை  அஸ்ஸெய்யித் செய்யித் யாஸீன் மௌலானா பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து அணிந்துரை வழங்கிய சிங்கப்பூரைச் சேர்ந்த புதுமைத்தேனீ மா. அன்பழகன் உரையாற்றும் போது, ‘மௌலானாவின் பாலைப் பாடலுக்கான உரையை நோக்குயமிடத்து, கடினமான சங்ககால சொற்களையெடுத்துப் பொருள் கூறுவது அவ்வளவு எளிமையான காரியமல்ல. அவற்றுக்கு மிக அழகாக சுவையாக ஆழமான உரையைத் தந்துள்ளார்; என்றும் கூறிய அவர் ஐங்குறுநூறு எனும் எட்டுத்தொகை இலக்கியத்துக்கு உரை எழுதிய துரைசாமி, கோ.வே. சோமசுந்தரனார், ஆ. தக்ஷணாமூர்த்தி, சதாசிவ ஐயர் போன்றோர் வரிசையில் வைத்துப் போற்றப்படவேண்டியவர் நமது ஞானியார் மௌலானா. அதே போல் 13 ஆம் நூற்றாண்டில் திருக்குறளுக்கு உரையெழுத்திய பரிமேலழகர் போல் 21ஆம் நூற்றாண்டில் ஞானகுரு மௌலானர் ஐந்குறுநூறிற்கு உரை எழுத்திச் சிறப்புப்பெற்று விட்டார்’; என்று அவர் தனது அணிந்துரையில் குறிப்பிட்டார்.
அதனைத்தொடர்ந்து சென்னைப் புதுக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர், முனைவர்,  ஹ.மு. நத்தர்ஷர் மதிப்புரையாற்றினார்.
அதனையடுத்து இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் காலை இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் தமிழறிஞர், டாக்டர் தி. ஞானசேகரன் பாராட்டுரையாற்றினார். உரையில் அவர் கூறும்போது பாலைவன நூலாசிரியரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக விளங்கும் மஹானந்தலங்கார மாலை எனும் சித்திரக்கவிதை நூலைப்பற்றிக் குறிப்பிட்டர், ‘இன்றைய காலகட்டத்தில் வாப்பா நாயகத்தைத் தவிர (மௌலானாவைத் தவிர) சித்திரக்கவிதை எழுதிய புலமையாளரைக் காணமுடியாதுள்ளது’ என்றும், ‘மௌலானாவின்; அனைத்துப் படைப்புகளையும் நோக்குமிடத்து அது இன மத வேறுபாடுகளைக் களைந்து  மானுட இனத்தை இலக்கியத்தின் மூலம் செம்மைப்படுத்தி வழிகாட்டுவதாக அமைகிறது’ என்று தனது பாராட்டுரையில் குறிப்பிட்டார்.
அதனையடுத்து தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் தலைவர் மௌலவி, முனைவர்,  அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி வாழ்த்துரை வழங்கினார். அதனையடுத்து ராஜ் டிவி அகடம் விகடம் புகழ், கவிமாமணி பேராசிரியர், முனைவர் தி.மு. அப்துல் கதிர் (மேனாள் இஸ்லாமியக் கல்லூரி- வாணியம்பாடி) மிகச் சிறப்பான நூலாய்வுரை ஒன்றை நிகழ்த்தினார்.
அதனையடுத்து  ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சர்வதேசத் தலைவர் கலீபா, முனைவர் ஏ.பி.ஷஹாபிதீன் விழாவில் சிறப்பாக உரையாற்றிய பேச்சாளர் உட்பட பல நாடுகளில் இருந்தும்   zoom   செயலியூடாக இணையவழியில் கலந்துகொண்ட அனைத்து தமிழ் ஆர்வலர்களுக்கும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக நன்றி தெரிவித்து விழா ஸலவாத்துடன் இனிதே நிறைவுபெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.