எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு தேசிய காங்கிரஸின் அரசியல் பயணத்தில் உடனடி மாற்றம் தேவையாக உணரப்படுகிறது.

தேசிய காங்கிரஸ் கட்சி 70 வது ஆண்டில் கால்பதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் 2004ம் ஆண்டிலிருந்து கூட்டணி கட்சியாக பயணிக்கும் அரசியல் பயணத்தை முன்னோக்கி கொண்டு செல்வது (1951.09.02-2021.09.02) நிறைவு தினத்தில் இரு கட்சிகளுக்கு மிடையிலான அரசியல் கூட்டிணைவுக்கும்,சமூக மேம்பாட்டுக்கும் ஆரோக்கியமாக அமையும். அன்றி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனோ அல்லது தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய போன்ற 8 சிறு கட்சிகளுடன் நெகிழ்வுடன் தேசிய காங்கிரஸ் முன்னகர்வது எதிர்காலத்தில் கிழக்கில், அம்பாறை மாவட்டத்தில் அரசியல்  முன்னெடுப்புக்களை மேற்கொள்வதில் பாரிய எதிர்ப்புகளையும், சவால்களையும் சந்திக்கவேண்டிய கள நிலவரத்தை ஏற்படுத்தும் என தேசிய காங்கிரஸின் சட்டவிவகார கொள்கை அமுலாக்கள் செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும்,

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன போன்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தலைமை வகித்த  தலைவர்களின் ஆட்சி காலங்கள் ஒப்பிட்டு ரீதியில் சிறப்பாகவே அமைந்திருந்தன. பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களும் ஸ்ரீ.ல.சு.கட்சியுடனான அரசியல் இணைக்கப்பாட்டில்,சதுரங்கத்தில் சமூகத்திற்காக சாதித்து காட்டியவை அதிகம். அதே பெருந்தலைவர் வழிநின்று தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து இனங்களின் ஐக்கியத்திற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும், கிழக்கின் எழுச்சிக்கும்,  பிரதேசங்களின் அபிவிருத்திக்கும் வித்திட்டார்.

2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர் 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் தேர்தல் உடன்பாடு செய்து போட்டியிட்டு பல உள்ளுராட்சி சபைகளின் ஆட்சியை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கிழக்கில் கைப்பற்றவும், உறுப்பினர்களை பெறவும் வாய்ப்பு கிட்டியது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மிதவாத போக்கு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் வரலாற்றில் ரீதியில் ஆதரவு தளத்தை ஓரளவிற்கு கொண்டுள்ளது.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான உறவு 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர் நியமனங்கள் வழங்கும் இழுபறியில் தொடங்கி  அமைச்சராக நியமனம்வழங்காது ஓரவஞ்சனை காட்டுதல் வரை தொடர்கிறது. ஜனாசா எரிப்பு, முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் கைது,இஸ்லாமிய அமைப்புகள் தடை என முஸ்லிம் சமூகத்திற்கெதிரானஅநீதிகள் அரங்கேறும் இவ்வரசாங்கத்தின் கூட்டணியிலிருந்து விலகி அல்லது ஒதுங்கி இனிவரும் காலங்களில், தேர்தல்களை சந்திப்பதே முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்க்கான சூழலைத் தோற்றுவிக்கும்.

அதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறவினை மேலும் வலுப்படுத்துவதும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆரம்ப கால அங்கத்துவ கட்சி எனும் அந்தஸ்தை வளப்படுத்துவதும் 70 ஆண்டு நிறைவைக் காணும் இக்காலத்தில் அக்கட்சிக்கும், அரசாங்கத்திற்கும், ஆதரவாளர்களுக்கும் விடுக்கும் அரசியல் செய்தியாக அமையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.