ஜெனிவாவை நோக்கி மூன்று கடிதங்கள் ? நிலாந்தன்!

தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஐந்து கட்சிகளின் தலைவர்களும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கைச்சாத்திட்ட ஒரு பொதுக் கடிதம் நேற்று ஐநாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஐநா கூட்டத் தொடரையொட்டி இப்படி ஒரு கடிதத்தை அனுப்ப வேண்டும் என்று டெலோ இயக்கம் முன்னெடுத்த முயற்சிகளின் விளைவாக இப்படி ஓர் ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் கடந்த பல மாதங்களாக டெலோ இயக்கம் ஈடுபட்டு வந்தது. அம் முயற்சிகளை முதலில் தொடங்கியது மாவை சேனாதிராசாதான். அம்முயற்சிகளில் அவர் ஒரு கட்டத்தில் மதத்தலைவர்களையும் ஒருங்கிணைத்தார்கள் . Covid-19 சூழலுக்குள் மாவை சேனாதிராசாவின் மேற்படி முயற்சிகள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு போகவில்லை. இடையில் டெலோ இயக்கம் ஒரு புதிய ஒருங்கிணைப்பு முயற்சியை முன்னெடுத்தது.இது தொடர்பில் மாவை சேனாதிராஜா அணிக்கு மனஸ்தாபங்கள் உண்டு என்று தெரிகிறது.

டெலோ முன்னெடுத்த இந்த முயற்சிகளின் ஒரு கட்டத்தில் கடந்த 21ஆம் திகதி ஒரு மெய்நிகர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. இச்சந்திப்பின்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை. புளொட் இயக்கமும் கலந்து கொள்ளவில்லை. இச்சந்திப்பில் சுமந்திரன் அழைக்கப்படவில்லை. கட்சித் தலைவர்களுக்கான சந்திப்பு அது என்றபடியால் சுமந்திரன் அழைக்கவில்லை. உரையாடலின் போக்கில் ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்தா ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார். தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை இதில் பங்கு பற்றினாலும் இங்கு எடுக்கப்படும் முடிவுகளை சுமந்திரன் ஏற்றுக் கொள்வாரா? என்று. அதையடுத்து சந்திப்பை ஒழுங்குபடுத்திய டெலோ இயக்கம் சுமந்திரனை சந்திப்புக்குள் கொண்டுவந்தது. கிட்டத்தட்ட சந்திப்பின் இறுதி கட்டத்தில் நுழைந்த சுமந்திரன் தன்னுடைய நிலைப்பாட்டை வழமைபோல தெரிவித்தார். ஜெனிவா கூட்டத் தொடரையொட்டி கட்சிகள் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வந்து ஒரு பொது ஆவணத்தை அனுப்புவது என்று அச்சந்திப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.அப்பொது ஆவணத்தில் இணைக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது.

இச்சந்திப்பின்போது சுமந்திரன் தானும் சில தரப்புக்களும் இணைந்து ஐநாவுக்கு அனுப்புவதற்காக ஓர் ஆவணத்தை தயாரித்திருப்பதாக கூறியிருக்கிறார். அந்த ஆவணத்தை ஏனைய கட்சிகளுக்கு அனுப்புவதற்கும் அவர் உடன்பட்டிருக்கிறார். ஆனால் அந்த ஆவணத்தை அவர் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் வரையிலும் அனுப்பியிருக்கவில்லை. இக்காலப்பகுதிக்குள் டெலோ இயக்கம் ஏற்கனவே தயாரித்த ஆவணத்தை சந்திப்பில் கலந்து கொண்ட கட்சிகளுக்கு அனுப்பி அவற்றின் பரிந்துரைகளையும் திருத்தங்களையும் இணைத்து இறுதிவரைபை கடந்த புதன்கிழமைளவில் தயாரித்திருந்தது.அந்த ஆவணத்தை அவர்கள் எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பியிருக்கிறார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி,தமிழ் அரசுக் கட்சி, அனந்தி சசிதரனின் கட்சி ஆகிய மூன்று தரப்புக்களும் அதில் கையெழுத்திடவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடக்கத்திலிருந்தே ரெலோவின் முயற்சிகளுக்கு சாதகமாக பதில்வினை காட்டவில்லை. அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கு பதில் கூறவில்லை என்றும் தெரிகிறது. கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் நோய்த் தொற்றுக்கு உள்ளானதும் அவருடைய குடும்ப அங்கத்தவர்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளானதும் சிலவேளை ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனந்தி சசிதரன் தனது கட்சியின் மத்திய குழுவைக் கூட்டி அது தொடர்பில் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.ஆனால் இறுதிவரை அவர் முடிவை கூறவில்லை.

மாவை சேனாதிராஜா ஏனைய கட்சிகளுடன் இணைந்து கடந்த 26ஆம் திகதி நடந்த மெய்நிகர் சந்திப்பில் பங்குபற்றியிருக்கிறார். பொது கடிதத்தில் கையெழுத்திட மாட்டேன் என்று தெளிவாக கூறவில்லை.சுமந்திரன் அனுப்புவதாக கூறிய கடிதம் கிடைத்தபின் இரண்டு கடிதங்களையும் ஒப்புநோக்கி ஒரு பொது ஆவணத்தைத் தயாரிக்கலாம் என்ற தொனிப்பட மாவை பதில் கூறியிருக்கிறார். எனினும் சுமந்திரன் தான் அனுப்புவதாக கூறிய கடிதத்தை கடந்த வெள்ளி இரவே அனுப்பியதாக தெரிகிறது.அக்கடிதத்தை மேற்சொன்ன ஐந்து கட்சிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.

இதனிடையே மாவை சேனாதிராஜா நேற்று முன்தினம் அதாவது வெள்ளிக்கிழமை ஊடகங்களை அழைத்து அதில் தன் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறார். அதிலவர் “நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் தனித்தனியாக பிளவுபட்டு தனித்தனி கட்சிகளாக செயல்படுவது எங்களை பலவீனப்படுத்திவிடும். எங்களுடைய இலக்கை அடைய முடியாது கொரோனா நேரத்தில் இவ்வாறான கருத்துக்களுக்கு இடமளிக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.

எனினும் மாவை சேனாதிராஜா ஐந்து கட்சிகளின் கடிதத்தில் கையெழுத்திட மாட்டார் என்பதனை உணர்ந்த ஏனைய ஐந்து கட்சிகளும் இணைந்து நேற்று அதாவது சனிக்கிழமை காலை அந்தகடிதத்தை ஐநாவுக்கு அனுப்பியுள்ளன.

தமிழ் கட்சிகள் இவ்வாறு இணைந்து ஐநாவுக்கு கடிதம் அனுப்புவது என்பது இதுதான் முதற்தடவை அல்ல. ஏற்கனவே இந்த ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி அப்படி ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.நடந்துமுடிந்த ஜெனிவாகூட்டத்தொடரை முன்னிட்டு அந்த ஆவணம் தயாரிக்கப்பட்டது. மன்னாரைச் சேர்ந்த தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சிவில் சமூக பிரதிநிதிகள் இணைந்து மேற்படி ஒருங்கிணைப்பை முன்னெடுத்தார்கள். அது ஒரு வெற்றிகரமான ஆவணம்.கடந்த 12 ஆண்டு காலப் பகுதிக்குள் தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் யாவும் இணைந்து அப்படி ஒரு கடிதம் அனுப்பியது என்பது அபூர்வமான ஒரு அரசியல் நகர்வு.
ஆனால் கடந்த சனிக்கிழமை அதாவது நேற்று அனுப்பப்பட்ட கடிதத்தில் தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணையவில்லை. குறிப்பாக தமிழரசுக் கட்சி இதுவிடயத்தில் கடைசிவரை முடிவெடுக்காமல் முடிவு கூறுவதைக் ஒத்திப்போட்டுக்கொண்டு வந்ததாக ஒருங்கிணைப்பு முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் கூறுகிறார்கள்.மாவை சேனாதிராஜா தொடக்கத்திலிருந்தே ரெலோவின் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் தொடர்பில் சாதகமான மனநிலையோடு இருக்கவில்லை. ஒரே கூட்டமைப்புக்குள் இருந்தபடி தான் ஏற்கனவே தொடங்கிய ஒருங்கிணைப்பு முயற்சிகளை இடை முறித்து டெலோ ஒரு புதிய ஒருங்கிணைப்பு முயற்சியில் ஈடுபட்டமை தொடர்பில் அவர் சந்தோஷமாக இல்லை என்று தெரிகிறது. இதுதவிர தமிழரசுக் கட்சியின் உயர்மட்டம் டெலோவின் முன்னெடுப்புக்களை பரிசீலிக்க தயார் இல்லை என்றும் தெரிகிறது.சுமந்திரன் தயாரித்த கடிதத்தை தமிழரசுக் கட்சி தனியாக அனுப்பும் என்று தெரிகிறது. ஆனால் அக்கடிதம் கூட்டமைப்பு என்ற பெயரிலா அனுப்பப்படும்?

தன்னை ஒரு தூய மிதவாத கட்சியாக கருதும் தமிழரசுக் கட்சி ஆயுதப்போராட்ட பாரம்பரியத்தில் வந்த கட்சிகளின் பின்னே செல்ல தயார் இல்லையா ? அல்லது கூட்டமைப்புக்குள் உள்ள மிகப் பெரிய கட்சியாகவும் நாடாளுமன்றத்தில் தமிழ் கட்சிகளில் அதிக எண்ணிக்கையான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாகவும் காணப்படுவதால் ஏனைய கட்சிகள் தன்னை பின்பற்ற வேண்டுமே தவிர தான் ஏனைய கட்சிகளின் முன்னெடுப்பின் கீழ் இணைந்து போக முடியாது என்று தமிழரசுக் கட்சி கருதுகின்றதா?

எனவே தொகுத்துப் பார்த்தால் ஒரு பெருந்தொற்று நோய் சூழலுக்குள்ளும் தமிழ் கட்சிகள் தங்களுக்கிடையே ஒரு பொதுக் கருத்துக்கு வர முடியவில்லை என்று தெரிகிறது.ஒரே கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு கட்சிகள் இருவேறு கடிதங்களை அனுப்பும் ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன்,கலையரசன் ஆகியோர் இணைந்து தனியாக ஒரு கடிதத்தை ஐனாவுக்கு ஏற்கனவே அனுப்பியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதாவது ஒப்பீட்டளவில் ஐந்து கட்சிகள் ஒரு பொதுக் கருத்துக்கு வந்திருக்கின்றன. ஆனால் இரண்டு கட்சிகள் குறிப்பாக நாடாளுமன்றத்தில் ஏழு ஆசனங்களைக் கொண்டிருக்கும் இரண்டு கட்சிகள் வெளியே நிற்கின்றன. ஐநாவை நோக்கி தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு எடுக்கப்பட்ட இரண்டாவது முயற்சியும் முழு வெற்றி பெறவில்லை என்பதை மேற்கண்ட மூன்று கடிதங்களும் நிரூபிக்கின்றன.

இந்த ஆண்டு மேற்கண்ட கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு இருவேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இவ்விரண்டு முயற்சிகளின் அடிப்படையிலும் சிந்தித்தால் பின்வரும் கேள்விகள் எழுகின்றன. கட்சிகளாக முயன்று ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாதா? அப்படி ஏற்படுத்தினாலும் அதில் எல்லாக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க முடியாதா?. ஏனென்றால் ஒரு கட்சியை ஏனைய கட்சிகள் அங்கீகரிக்காத அல்லது ஒரு கட்சியின் தலைமைத்துவத்தை ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்ளாத நிலைமைகளே அதிகம் உண்டு. மாறாக தேர்தல் நோக்கு நிலையிலிருந்து சிந்திக்காத ; தேர்தல் அபிலாசைகள் இல்லாத; அரசியல் சந்நியாசிகளாக காணப்படும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து முன்னெடுக்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகள்தான் ஒப்பீடடளவில் வெற்றி பெறுமா?

கடந்த ஜனவரி மாதம் முன்னெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பு முயற்சியின் போதும்கூட பொதுக் கடிதம் அனுப்பப்பட்டபின் சம்பந்தப்பட்ட கட்சிகள் தங்களுக்கிடையே பகிரங்கமாக மோதிக் கொண்டன. அது ஒரு அசிங்கமான மோதல்.தமிழ் மக்கள் ஒரு திரளாக இல்லை என்பதனை அல்லது தமிழ் மக்களை ஒரு திரளாக கூட்டிக்கட்ட இந்த கட்சிகளால் முடியாது என்பதை நிரூபித்த அருவருப்பான ஒரு மோதல்.அதோடு சிவில் சமூகங்களுக்கு இருக்கக்கூடிய வரையறைகளை உணர்த்திய ஒரு மோதல் அது. அதில் ஏற்பட்ட சலிப்பு காரணமாக சிவில் சமூகங்கள் இதுபோன்ற முயற்சிகளில் எதிர்காலத்தில் ஈடுபடுவதற்கு முன் கடுமையாக யோசிக்க வேண்டியிருக்கிறது என்று தெரிகிறது.

இப்படிப்பட்ட பாரதூரமான தோல்விகரமான ஒரு வெற்றிடத்தில் நேற்று ஜனாவுக்கு அனுப்பப்பட்ட கடிதமானது ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையிலான கட்சிகள் இணைந்து அனுப்பிய ஒரு பொதுக் கோரிக்கை என்ற முக்கியத்துவத்தை கொண்டிருக்கிறது. எனினும் தமிழரசுக் கட்சி தனியாக ஒரு கடிதத்தை அனுப்ப இருப்பது எதைக் காட்டுகிறது? தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இணையவில்லை என்பது எதைக் காட்டுகிறது? கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு கடிதத்தை அனுப்பி இருப்பது எதைக் காட்டுகிறது ? தமிழ் மக்கள் இப்பொழுதும் ஒரு பெருந்திரளாக ஒரு தேசமாக இல்லை என்பதையா?

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்