கருணா அம்மன் கல்முனையில் தமிழ்- முஸ்லிம் உறவை சீரழிக்க முனைகிறார் : கோயில் வீதி காணி விவகாரத்தில் எத்தரப்பையும் பாதிக்காத தீர்வே அவசியம் – ச.ராஜன்.

யாரும், எங்கும் சட்ட ரீதியாக குடியிருக்கலாம். அதனை யாரும் தடுக்க முடியாது. அவர்களின் காணியில் அவர்கள் குடியிருக்க முழு உரிமையும் உள்ளது. ஆனால் அந்த காணியில் மதரஸா கட்டுவது பொருத்தமான ஒன்றல்ல. தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் இவ்வாறு ஒரு மதரஸா அமைப்பதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். குறித்த காணிக்கு அண்மையில் மிக நீண்ட கால வரலாற்றை கொண்ட கோயில் உள்ளது. தமிழர்களின் மரபுகள், கலாச்சாரம் இதன்மூலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. முஸ்லிங்கள் செறிந்துவாழும் பிரதேசத்தின் நடுவில் இந்துக்கடவுள் சிலைகளை நிறுவினால் எப்படி இருக்கும். அதுபோலவே இந்த செயலும் உள்ளது என கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.

அம்பாறை ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற கல்முனை காணி சர்ச்சை விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

கல்முனை பிரதேச தமிழ், முஸ்லிம் மக்களை பிரித்து மோதவிடும் நிலையை உருவாக்க அம்பாறைக்கு வெளியே இருந்து வந்த வெளியூர் அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள். தமிழர்கள் செறிந்துவாழும் கல்முனை இரண்டாம் பிரிவில் அமைந்துள்ள கோயில் வீதியில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான காணியை முஸ்லிம் ஒருவருக்கு அந்த காணி உரிமையாளர் விற்பனை செய்துள்ளார். முஸ்லிம் ஒருவருக்கு காணியை விற்றதனால் எழுந்த சர்ச்சையை அடுத்து அந்த காணியை தமிழர் ஒருவரே திரும்பிவாங்க முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் (வி. முரளிதரன்) ஏற்பாடு செய்து ஒரு பேட்ச் காணியை ஒரு லட்சம் ரூபாய் வீதம் விற்பனை செய்ய ஆறுமாதம் கால அவகாசமும் வழங்கப்பட்டு எட்டு மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் அந்த காணியை எந்த தமிழரும் கொள்வனவு செய்ய முன்வரவில்லை. கடந்த தேர்தலில் இந்த காணியை காட்டி பிரச்சாரம் செய்து வாக்குப்பெற்றார் கருணா அம்மான். அந்த வளவின் எல்லை சுவற்றையும் அப்போது உடைத்தார்கள்.

பின்னர் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் ஒருவரின் குடும்பத்தினர் அந்த வளவை கொள்வனவு செய்ய பலமாதங்களின் பின்னர் தயாரான போது ஒரு பேட்ச் காணியை ஒரு லட்சத்தி அறுபதாயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்ய காணி உரிமையாளர் இணக்கம் வெளியிட்டார். விலை கட்டுப்படியாகாத காரணத்தினால் அந்த விடயம் கைவிடப்பட்டது. இப்போது அந்த காணியை வாங்க எந்த தமிழரும் முன்வராத காரணத்தினால் அந்த காணியின் சுற்றுமதில் அமைக்கப்பட்டு மதரஸா ஒன்றை அமைக்க வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த காணி விடயமானது இனவாத, பிரதேசவாத, கட்சி வாதங்களை கடந்து மனிதாபிமானத்துடன் அணுக வேண்டிய ஒன்றாக உள்ளது.

இந்த விடயத்தில் மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் கல்முனை மாமங்க வித்தியாலயத்தை அண்டிய பிரதேசத்தில் எழுந்த காணிவிவகாரத்தை போன்று இதனையும் அணுகி யாருக்கும் பாதிப்பில்லாத நிரந்தர தீர்வை முன்வைக்க வேண்டும். இப்படியான முரண்பாடுகளை களைய எமது பிரதேசத்திலிருந்தே அரசியல் தலைமைகள் எதிர்காலத்தில் உருவாக வேண்டும். கடந்த மாகாணசபைக்கு அம்பாறையிலிருந்து மூன்று ராஜாக்களை அனுப்பினோம். முதலமைச்சராக சிவநேசதுரை சந்திரகாந்தன் இருந்தார். அவர்களினால் அம்பாறைக்கு எதையும் செய்ய முடியாமலே போனது. இப்போது பிள்ளையான் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் வாய் திறக்க முடியாது வாய்க்குள் கொழுக்கட்டை வைத்துள்ளார் போலும். சத்தமே வெளிவருவதாக தெரியவில்லை. அவரை மீண்டும் கிழக்கு முதலமைச்சராக கொண்டுவர சிலர் கடும் எத்தனிப்புக்களை செய்துகொண்டு அம்பாறையில் கப்பலை தொடர்ந்து படகுக்கு ஆதரவு திரட்டுகிறார். தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவோர் தமிழ் மக்களின் குரலாக எங்கும் ஒலிக்க வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்