பரந்தனில் சிறுவர்களைக் கொலை செய்யும் நோக்குடன் குறிவைத்துத் தாக்கிய கும்பல்.

பரந்தனில் சிறுவர்களைக் கொலை செய்யும் நோக்குடன் குறிவைத்துத் தாக்கிய கும்பல்
நாட்டில் ஊரடங்குச் சட்டம், அவசரகாலச் சட்டம் நடைமுறையிலுள்ள வேளையில் பரந்தன் சிவபுரம் கிராமத்திலுள்ள வீடொன்றினுள் கத்தி, வாள், கோடரி, கற்கள், பொல்லு, இரும்புக்கம்பி போன்ற ஆயுதங்களுடன் அத்துமீறி உள்நுளைந்த 25 இற்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய கும்பல் வீட்டிலுள்ளவர்களைத் தாக்கி வீட்டிலுள்ள வீட்டுப் பாவனைப் பொருட்களையும் அடித்துடைத்து துவம்சம் செய்ததுடன் வீட்டிலுள்ள சிறுவர்களை  கொலைசெய்யும் நோக்குடன் தேடியுள்ளார்கள். அவ்வீட்டிலுள்ள 4 சிறுவர்களும் அருகிலுள்ள வீட்டிற்குள் ஏற்கனவே ஒளிந்துகொண்டமையால் பாதுகாப்பாகத் தப்பியுள்ளார்கள்.
நேற்று முன்தினம் 08.09.2021ம் திகதி மாலை 5.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பரந்தன்-கிளி-44 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள சிவபுரம் கிராமத்திலுள்ள வீடு ஒன்றினை கற்கள் கொண்டு தாக்கிய 25 பேருக்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய கும்பல் வீட்டினுள் அத்துமீறிப் புகுந்து வீட்டிலுள்ளவர்களைக் கண்டபடி தாக்கியதுடன் வீட்டிலுள்ள பெறுமதியான பொருட்களையும் அடித்து நாசப்படுத்தியதுடன் வீட்டிலுள்ள அவர்களது சிறுபிள்ளைகள் எங்கே அவர்களைக் கொலைசெய்யப் போகின்றோம் எனக்கூறி சிறுவர்களைத் தேடியுள்ளார்கள். இதேவேளை அவ்வீட்டுச் சிறுவர்கள் அருகிலுள்ள வீடொன்றினுள் ஒளிந்துகொண்டமையால் தாக்குதலிலிருந்து தப்பியதாகக் கூறப்படுகின்றது.
இதேவேளை கல்லெறித் தாக்குதலுக்கு அஞ்சி வீட்டு உரிமையாளர் வீட்டு அறைக் கதவைப் பூட்டிவிட்டு வீட்டினுள் ஒளிந்துகொண்ட போது தாக்குதலாளிகள் வீட்டுக் கதவின் பூட்டை கோடரியால் கொத்தி உடைத்துவிட்டு வீட்டினுள் புகுந்து தாக்க முற்பட்ட போது வீட்டு உரிமையாளரால் வீட்டிற்குள் வைத்து தற்பாதுகாப்புக்காகத் திருப்பித் தாக்கியதில் தாக்குதலாளிகளில் ஒருவன் கையில் காயத்திற்குள்ளாகி கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தைக் கேள்வியுற்ற பரந்தன் பகுதி இராணுவத்தினர் அவ்விடத்திற்கு விரைந்து சென்றுள்ளமையால் தாக்குதல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. தோடர்ந்து அங்கு சென்ற கிளிநொச்சிப் பொலிஸார் வீட்டினுள் புகுந்த தாக்குதலாளிகளை வீட்டினுள் வைத்துத் திருப்பித் தாக்கிக் காயப்படுத்தியமைக்காக வீட்டின் உரிமையாளரை மாத்திரம் கைது செய்து கொண்டு சென்றனர். ஆனால் வீட்டினுள் அத்துமீறி உள்நுளைந்து தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தவர்கள் சிலர் அவ்விடத்தில் நின்றிருந்த போதிலும் அவர்கள் எவரையும் பொலிஸார் கைது செய்யவில்லை எனவும் இதுவரை கைது செய்யவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து அன்றிரவே பாதிக்கப்பட்டவர்களால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து எந்தவொரு பொறுப்பு வாய்ந்த அதிகாரியும் (சிறுவர் பாதுகாப்புடன் தொடர்புடைய அதிகாரிகள் உட்பட) பாதிக்கப்பட்டவர்களை தொடர்புகொண்டோ நேரடியாகச் சென்றோ உரிய நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை என கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட குறித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மீண்டும் தாக்கப் போவதாக தாக்குதலாளிகளால் கூறப்பட்டு அச்சுறுத்தப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்களால் கூறப்படுகின்றது.
இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் பரந்தன் பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் களவு வீட்டினுள் அத்துமீறி உட்புகுந்து தாக்குதல் நடத்துதல், கசிப்பு உற்பத்தி விற்பனை, சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை போன்ற பல சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் என்பதும் இவர்களைக் கைது செய்யும் கிளிநொச்சிப் பொலிஸார் பின்னர் பிணையில் விடுவிப்பதாகவும் அதனாலேயே தாம் என்ன செய்தாலும் சட்டம் தம்மைத் தண்டிக்காது திரும்பவும் பிணையில் வருவோம் என்னும் நோக்கத்துடன் மீண்டும் மீண்டும் இப்படியான சமூகவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள் என பலராலும் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இக்குற்றச் செயலில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் அண்மையில் பரந்தன் 14ம் ஒழுங்கையிலுள்ள வீட்டினுள் உட்புகுநு;து வீட்டின் உரிமையாளர்களை பெண்கள் உள்ளிட்டவர்களை கண்டபடி தாக்கியதுடன் வீட்டிலுள்ள வாகனம், வீட்டுப் பாவனைப் பொருட்களை அடித்து நாசப்படுத்தியமை பொருட்களைத் திருடிச் சென்றமை, போன்ற குற்றச் செயல், மற்றும் பரந்தன் வீதியால் சிறியரக வாகனத்தில் சென்ற வியாபாரி ஒருவரை வாகனத்துடன் கடத்திச் சென்று ஆட்கள் நடமாட்டமற்ற காட்டுப் பகுதியில் அவரைத் தாக்கி வாகனத்தையும் அவரிடமிருந்த பணத்தையும் பறித்துச் சென்றமை போன்ற குற்றச் செயல்களில் கைது செய்யப்பட்டு அண்மையில்த்தான் பிணையில் வெளியே வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச்சமூகவிரோத கும்பலைச் சேர்ந்தவர்களது குற்றச் செயல்களைத் தாங்கிக்கொள்ள முடியாத இப்பிரதேசத்தைச் சேர்ந்த கிராமங்களது மக்கள் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், கமக்கார அமைப்புக்கள் போன்ற பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இச்சட்டவிரோத குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்களின் பெயர், முகவரியைக் குறிப்பிட்டு அவர்களை இனங்காட்டி அவர்களுக்குத் தகுந்த நடவடிக்கை எடுத்து குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துமாறு கோரி வடமாகாண ஆளுநர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்கள், கண்டாவளைப் பிரதேச செயலாளர், கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் உயரதிகாரி, இராணுவப் பொறுப்பதிகாரி போன்றோருக்குக் கடிதங்களை அனுப்பியிருந்ததாகவும் அவர்கள்கூட இக்குற்றக் கும்பலைக் கட்டுப்படுத்த இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகவம் தெரியவில்லை எனவும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைச் சுட்டிக்காட்டிக் கடிதங்களை வழங்கியவர்களை அவர்கள் தொடந்தும் அச்சுறுத்தி வருவதாகவும் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள்கூட இதற்கு எவ்வித முடிவெடுப்பதெனத் தெரியாது தமது பாதுகாப்புக் கருதி பலர் ஒதுங்கியுள்ளதாகவும் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இக்குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு தமது உரிய கட்டமைப்புக்களைப் பயன்படுத்தமாட்டாதோ என பாதிக்கப்பட்ட பலரும் கூறிக் கவலை தெரிவிக்கின்றார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.