அரசாங்கத்தின் இயலாமை நாளுக்கு நாள் உறுதி செய்யப்படுகிறது – சஜித் பிரேமதாச.

தற்பொழுது மீண்டும் நாட்டில் வரிசை யுகம் மற்றும் நிவாரண யுகம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், நாளுக்கு நாள் அரசாங்கம் மக்களை அழுத்தத்துக்கும், துரதிருஷ்டவசமான தலைவிதிக்குள்ளும் தள்ளுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், நாட்டின் பணக்காரர்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கி அரச வருமானத்தை இழந்து அரசாங்கம் தனது பொறுப்பற்ற நடவடிக்கைகளைத் தொடங்கியது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

அரசாங்கத்தின் பொறுப்பற்ற, திறமையற்ற செயற்பாடுகள் மற்றும் தூரநோக்கற்ற திட்டங்கள் நாளாந்தம் நிரூபிக்கப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

அரசாங்கம் ஒரு மூடிய பொருளாதாரத்தை நோக்கி நகர்கிறது என்றும் என்றாலும் அரசாங்கம் பரந்த பொருளாதார மாற்றங்களை சிறந்த முகாமைத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் இதனூடாக இந்த நாட்டு மக்களுக்கு நிதி தூண்டுதலை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த நாட்டின் பொருளாதாரக் கொள்கையில் முழுமையான மாற்றம் இருக்க வேண்டும் என்றாலும், தற்போதைய அரசாங்கம் ஒரு போலித்தனத்தை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், அமைச்சர்களை மாற்றுவதற்காக அரசாங்கம் ஒரு சங்கீதக் கதிரைப் போட்டியைத் தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

நாடு இப்போது வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாகவும், இந்த வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் திறன் தற்போதைய அரசாங்கத்துக்கு இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

இன்று (11) திஸ்ஸமஹாராம தெபரவெவவில் 26 வது கட்ட “ஜன சுவய” கருத்திட்டத்தில் பங்கேற்ற போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற  ”விபக்ஷயே ஹுஸ்மக் ‘ நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தும் “ஜன சுவய” கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் சமூக நலத்திட்டத்தின் 26 வது கட்டமாக முப்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா  (3,500,000/-) பெறுமதி வாய்ந்த அத்தியாவசிய மருத்துவமனை உபகரணங்கள் திஸ்ஸமஹாராம தள மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

இதற்கமைவாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் திஸ்ஸமஹாராம தள மருத்துவனையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் பிரபாத் வீரசிரி அவர்களிடம் FUJI COMPUTED RADIOGRAPHY SYSTEM த்துக்குரிய Image Plate and Cassete , PRIME T 2 Image Digitizer , FCR Prima Console , DRYPIX IMGER ஆகிய அத்தியாவசிய 4 உபகரணத்தொகுதி இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டன.

இது ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சி உட்பட அம் மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களினதும் பங்களிப்புடன் எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நன்கொடையாகும்.

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் “ஜன சுவய” கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ”விபக்ஷயே ஹுஸ்மக்’ நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.

இதற்கு முன்னர் 25 கட்டங்களில்  749 இலட்சம் (ரூபா 74,994,000)  பெறுமதி வாய்ந்த மருத்துவமனை உபகரணங்கள் ஐக்கிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்டுள்ளன.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்