தலைவர் ரவுப் ஹக்கீமின் மனதில் மாற்றம் தெரிகிறது. பிடிவாதம் களைந்து அடுத்தகட்ட முஸ்லிம்தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட தூதுக்குழுவினர் நேற்று (28.09.2021) இரு சிறுபான்மை பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடினர். இவ்வாறு இடம்பெறுவது இது முதல் முறையல்ல. வரலாற்றில் பல நூறு சந்திப்புக்கள் இடம்பெற்றதனை அறிந்திருக்கின்றோம்.

இவ்வாறான சந்திப்புக்களில் முஸ்லிம்கள் சார்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் மட்டுமே கலந்துகொள்வது வழமையாகும். ஆனால் நேற்றைய சந்திப்பில் வழமைக்கு மாறாக மு.கா செயலாளர் நிசாம் காரியப்பரையும் தலைவர் அழைத்து சென்றது வரவேற்கத்தக்க விடையமாகும்.

தமிழர்கள் சார்பாக அதன் தலைவர் இரா சம்பந்தனோ அல்லது வேறு தலைவர் எவராவது தனியாக சென்று உயர்மட்ட சந்திபுக்களில் கலந்துகொண்ட வரலாறுகள் இல்லை.

சுதந்திரத்துக்கு பின்பு தந்தை செல்வா தலைமையிலான குழுவினரும், ஆயுத போராட்டம் ஆரம்பித்ததன் பின்பு 1985 இல் திம்பு பேச்சுவார்த்தை தொடக்கம் இன்று வரைக்கும் தமிழ் மக்கள் சார்பாக அதன் தலைவர்கள் குழுவாக சென்று சந்திதத்தே வரலாறாகும்.

இவ்வாறு குழுவாக சென்று சந்திப்பதன் காரணமாக அங்கு பேசப்படுகின்ற விடையங்களின் உண்மை தன்மையை தமிழ் மக்கள் அறிந்துகொள்வதுடன், அவர்கள் அரசியல்மயப்பட்டு, தமிழ் சமூகத்தில் ஏராளமான தலைவர்கள் உருவாகியுள்ளனர்.

அதாவது இரா சம்பந்தன் மரணித்தால், பயிற்றுவிக்கப்பட்ட அடுத்த தலைவர்கள் வரிசையில் இருக்கின்றனர். இதனால் தலைமைத்துவ வெற்றிடம் தமிழ் சமூகத்தில் இல்லை.

ஆனால் முஸ்லிம் சமூகத்தின் நிலை அவ்வாறல்ல. இவ்வாறான உயர்மட்ட சந்திப்புக்களில் தலைவர் ரவுப் ஹக்கீம் மாத்திரம் கலந்துகொள்வது வழமையாகும். அவ்வாறு சந்திக்கும்போது அங்கே என்ன பேசப்பட்டதென்று தலைவர் கூறினால் மாத்திரமே அறிந்துகொள்ள முடியும். அவ்வாறு கூறுவதில் சந்தேகங்களும் ஏற்படுவதுண்டு.

இந்நிலை தொடர்வதனால் முஸ்லிம் மக்கள் மத்தியில் இரண்டாம் கட்ட தலைமைத்துவ வெற்றிடம் காணப்படுகின்றது. அதாவது முஸ்லிம் காங்கிரசின் அடுத்தகட்ட தலைமைத்துவம் உருவாக்கப்படவில்லை. எவரும் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

தலைவர் திட்டமிட்டு தன்னை மாத்திரம் முன்னிலைப்படுத்துவதனால் தலைவரைவிட்டால் முஸ்லிம் சமூகத்தில் தலைமைத்துவ தகுதி வேறு எவருக்குமில்லை என்ற மாய தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்றைய தலைவர் மரணித்தால் கட்சி பலயீனமடைந்து பலகூறுகளாக பிளவுபடுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

தாயின் கருவறைக்குள் துடிக்க ஆரம்பித்த இதயமானது என்றோ ஒருநாள் தனது துடிப்பை நிறுத்திவிடும். அது எப்போதென்று எவராலும் கூறமுடியாது. அவ்வாறு நிறுத்துவதற்கு வயது நிர்ணயம் இல்லை.

இருபது வருடங்கள் கடந்தும் கட்சியின் அடுத்தகட்ட தலைமைத்துவம் இன்றைய தலைவரினால் திட்டமிட்டு உருவாக்கப்படவில்லை. முஸ்லிம் மக்கள் பலரது தியாகத்தினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய தலைவரோடு அல்லது தலைவரின் பிடிவாதத்தினால் அல்லது மேட்டுக்குடி சிந்தனையினால் அழிந்துவிடுமோ என்ற அச்சம் பலரிடம் உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு செயல்படுவது போன்று அனைத்து உயர்மட்ட பேச்சுவார்த்தைகளிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மாத்திரம் தனிமனிதனாக செல்லாமல் கட்சியின் உயர்மட்ட குழுவாக சென்று கடந்தகாலங்களில் சந்திப்புக்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

அத்துடன் தலைவரிடம் கோள் கூறி, மூட்டிவிட்டு, கால்பிடித்ததன் பின்பு அவர்கள்தான் விசுவாசிகள் என்ற நம்பிக்கையில், தலைவர் வழங்கிய பிச்சையினால் கட்சியின் உயர்மட்டத்தில் உள்ள ரோசமத்தவர்கள் எவரும் சமூகத்தை தலைமைதாங்க தகுதியற்றவர்கள். தலைமைக்கு பொருத்தமானவர்களை உள்வாங்கி அவர்களை அடுத்தகட்ட தலைமைக்காக பயிற்றுவிக்க வேண்டும். இது கட்சிக்கும், சமூகத்துக்கும் தலைவர் செய்யவேண்டிய கடமைகளில் ஒன்றாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.