மக்களின் வாழ்வாதாரத்தைப் பிரதான இலக்காகக் கொண்டே வருகின்ற வரவு செலவுத் திட்டம் அமையும்… (இராஜாங்க அமைச்சர் – ச.வியாழேந்திரன்)

இம்முறை வர இருக்கின்ற வரவு செலவுத் திட்டம் வாழ்வாதாரத்தை மையப்படுத்தியதாகவே இருக்கும். ஒவ்வொரு கிராமங்களிலுமுள்ள பிரச்சனைகளை இனங்கண்டு தீர்ப்பதோடு, கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புகின்ற விடயத்தைப் பிரதான இலக்காகக் கொண்டே வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சரினால் தயாரிக்கப்பட்டு வருகின்றது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

படையண்டாவெளி மைதானம் புனரமைப்பு தொடர்பிலான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்திற்கூடாக முடிந்தளவு எமது மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கக் கூடிய வேலைத்திட்டங்களை மக்களின் காலடிக்குக் கொண்டு சேர்ப்பதே எங்களது பிரதான நோக்காக இருக்கின்றது. ஆளுந்தரப்பில் நாங்கள் ஒரு முக்கிய பொறுப்பில் இருப்பதனால் அதிகளவான வேலைத்திட்டங்களை முடிந்தளவு நாங்கள் கொண்டுவரக் கூடியதாக இருக்கின்றது. கடந்த காலங்களிலே அரசியல் அதிகாரம் என்பது எங்களிடம் இருக்கவில்லை. தற்போது முடிந்தளவு அவற்றைச் செய்யக் கூடியதாக இருக்கின்றது.

எமது மக்களைப் பொறுத்த வரையிலே இரண்டு பிரதான விடயங்கள் இருக்கின்றன. ஒன்று நீண்டகாலமாகப் புறையோடிப் போயுள்ள எமது மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகள். எமது மக்கள் மத்தியிலே இருக்கின்ற இன்னுமொரு மிகப் பெரிய பிரச்சனை அபிவிருத்தி சார்ந்த விடயங்கள். இவை இரண்டையும் நாங்கள் சமாந்தரமாகக் கொண்டு செல்ல வேண்டும்.

தமிழ் மக்களைப் பொறுத்தளவில் மூன்று தசாப்த கால யுத்தத்தில் பலதரப்பிலும் பாதிக்கப்பட்ட சமூகமாக, பல வகையிலும் இன்னல்களைச் சுமந்த கொண்டிருக்கும் சமூகமாகவும் இருப்பதால் எமது இரண்டு கண்கள் போல எமது சமூகத்திற்கு தீர்வும் தேவை, அபிவிருத்தியும் தேவை. உரிமையோடு சம்மந்தப்பட்டு நீண்டகாலம் தீர்க்கப்படாமல் இருக்கின்ற பிரச்சனைகளுக்கான தீர்வினை எமது மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதனை நாங்கள் மிகக் கவனமாகவும், இராஜதந்திரமாகவும் முன்னெடுக்க வேண்டும்.

இந்தக் கொவிட் நிலைமை இந்த டிசம்பருக்குள் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என நம்புகின்றோம். நாட்டில் 75 வீதமானவர்களுக்குக் கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. நாளை முடக்க நிலை நீக்கப்பட்டாலும் சில கட்டுப்பாடுகளுடன் முற்று முழுதாக கொவிட்டில் இருந்து எமது மக்களைப் பாதுகாப்பதற்கான செயற்திட்டங்களை வகுத்து இந்த வருடத்தோடு கொவிட்டில் இருந்து மீண்ட நாடாக எமது நாட்டை மாற்றுவதற்கான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஒரு வருட காலத்திலே கொவிட்  மிகப் பெரிய சவாலாக இருக்கின்றது. அதிலிருந்து மீளெழ முடியும். அந்த நம்பிக்கையும் இருக்கின்றது. அதற்கான சாதகமான வழிகளும் எம் கண்முன்னே தெரிகின்றது. அவ்வாறான சூழல் வரும்போது அரசாங்கத்தால் இன்னும் பல பாரிய அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்களையும், வாழ்வாதார செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியும்.

இம்முறை வர இருக்கின்ற வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க வாழ்வாதாரத்தை மையப்படுத்தியதாகவே இருக்கும். ஒவ்வொரு கிராமங்களிலுமுள்ள பிரச்சனைகளை இனங்கண்டு தீர்ப்பதோடு, கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புகின்ற விடயத்தைப் பிரதான இலக்காகக் கொண்டே வரவு செலவுத் திடம் நிதி அமைச்சரினால் தயாரிக்கப்பட்டு வருகின்றது. அதற்கான திட்ட முன்மொழிவுகள் தற்போது கிராம மட்டங்களில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் 30 இலட்சம் நிதி, ஒவ்வொரு வட்டார உறுப்பினருக்கும் 40 இலட்சம் நிதி, பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவருக்கு 100 மில்லியன் நிதி, பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைவருக்கு 20 மில்லியன் நிதி என நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இவையெல்லாம் கிராமியப் பொருளாதாரத்தை வளப்படுத்துகின்ற வகையிலும், கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலுமே ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.

எமது மாவட்டத்திலே விவசாயம், மீன்படி , கால்நடை, சிறுபொருளாதாரப் பயிர்ச்செய்கை போன்றனவற்றை இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கான திட்டங்கள் இன்னும் வகுக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு தனிப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் உயரும். அதனூடாகவே ஒவ்வொரு குடும்பங்களும் போதிய வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும். அதற்கான நடவடிக்கைகளையே நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்