எமது மக்களைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் சுகபோக வாழ்க்கை வாழ்வதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை…

எமது மக்களைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் சுகபோக வாழ்க்கை வாழ்வதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. மிக விரைவில் காலம் இவர்களுக்கான பதிலை வழங்கும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் விடயம் தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக கொரோனாவை விட வேகமாகப் பிரவி வருகின்ற விடயமாக ஞானசார தேரர் கூறிய விடயங்கள் தொடர்பில் பேசப்படுகின்றது. இஸ்லாமிய சகோதரர்களின் விடயங்கள் தொடர்பில் ஞானசார தேரர் கதைத்தார் என்ற விடயத்தில் இஸ்லாமிய பாராளுமன்ற உறுப்பினர்களே எதுவும் சொல்லாமல் இருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர்களுக்காகவே கதைப்பதென்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம்.

எமது மக்களின் 70 வருட அரசியல் பேராட்டம் இன்றுரை முடிவுக்கு வராத நிலையில் எமது மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்குச் சென்றவர்கள் பாராளுமன்றத்தில் கிடைக்கப்பெறுகின்ற நேரத்தை எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் பேசாமல் இஸ்லாமிய சகோதரர்களின் பிரச்சனை தொடர்பில் பேசுவது எந்தவிதத்தில் நியாயமாகும். இஸ்லாமிய மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கதைப்பதற்காகவே இஸ்லாமிய மக்களால் வாக்களித்து தெரிவு செய்யப்பட்ட இஸ்லாமிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இருக்கின்றார்கள்.

எமது மக்களுக்கு எத்தனையோ சொல்லான பிரச்சனைகள் இருக்கின்றது. காணி அபகரிப்பு, அரசியற் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் விடயம், பௌத்த மயமாக்கப்படும் நமது காணிகள், மீண்டும் சந்தேகத்தின் போல் கைது செய்யப்படும் இளைஞர்கள், பொருhளதார ரீதியிலும், அபிவிருத்தியினூடாகவும் மக்களைக் கட்டியெழுப்புதல் போன்ற பிரச்சனைகள் எம் மத்தியில் இருக்கின்ற வேளையில் அடுத்தவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் நாம் அதிகம் கதைக்கத் தேவையில்லை. அவர்கள் தொடர்பில் கதைக்க வேண்டாம் என்ற சொல்லவில்லை கிடைக்கும் நேரம் பூராகவும் அவர்கள் பற்றியே கதைத்தால் நமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் எப்போது கதைப்பது.

ஒரு விடயம் குறிப்பிட வேண்டும். சிங்கள தரப்புகள், பௌத்த மதகுருமார்களை பற்றி வேறு யாராவது பாராளுமன்ற உறுப்பினர்கள் கதைத்தாலே நடவடிக்கை எடுக்கின்ற இந்த அரசாங்கம் சுமந்திரன், சாணக்கியன் போன்றவர்கள் கதைக்கும் போது மாத்திரம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் எமக்கு ஒரு பாரிய சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது. ஒருவேளை அரசாங்கத்தினுடைய திட்டமிடல் ஒன்று இவர்களுடாக நடக்கின்றதோ என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது.

சிங்கள அரசாங்கமானது தாங்கள் சொல்லும் நபர்களே வடக்கு கிழக்கில் ஆள வேண்டும் என்ற கோட்பாட்டை வகுத்துள்ளது. இந்த வகையிலே அரசின் பிராதானிகளால் கட்டவிழ்த்தப்பட்டு வரும் நாடகமே பாராளுமன்றத்தில் சாணக்கியனால் முழக்கப்படுகின்ற விடயங்கள். வடக்கில் சுமந்திரனையும், கிழக்கில் சாணக்கியனையும் முன்னிலைப்படுத்தினால் அரசாங்கத்தின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

எமது அரசியல்வாதிகள் எமது மக்களின் பிரச்சனைகளை முன்நிறுத்தி அதற்குரிய தீர்வுத் திடடத்தினைக் காணாமல் மூவின மக்களையும் மோதலுக்காக்கும் வகையில் அரசியல் செய்து வருகிறார்கள். இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. எமது மக்கள் வாக்களிப்பது எமது மக்களுக்கான ஒரு தீர்வு கிடைக்கப்பறெ வேண்டும் என்ற நோக்கத்தினால் தான். ஆனால் எமது அரசியல்வாதிகள் எமது மக்களின் விடயங்களை முன்நின்று செய்யப்போவதில்லை.

எமது மக்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். அரசாங்கத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பதை விட நேரடியாக அரசாங்கத்தை அமைக்கும் பிரதான கட்சியிடம் கோரிக்கைகளை முன்வைத்து வாக்களிக்கலாம்.

சர்வதேச நாடுகள் சேர்ந்து தான் எமது போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்தார்கள்.  அதற்குப் பிராயச்சித்தமாக அந்த சர்வதேச நாடுகள், ஐநா சபை என்பனவே எமது மக்களுக்கான நியாயமான உரிமையைப் பெற்றுத் தர வேண்டும். எமது சுயநிர்ணய உரிமை விடயத்தை எமது புலம்பெயர் அமைப்புகள், சர்வதேச நாடுகள் பார்த்துக் கொள்ளட்டும். ஆனால் இங்கிருக்கும் அரசு சார்ந்த சாராத அரசியல்வரிகளால் எந்தத் தீர்வும் வரப்போவதில்லை. அரசாங்கம் இவர்களுடாக எதுவும் செய்யப்போவதுமில்லை.

அரசாங்கத்தோடு சேர்ந்திருப்பவர்கள் தாங்கள் கதிரைகளைப் பிடித்துக் கொண்டு அரசாங்கத்தினால் தரப்படும் சலுகைகளை தங்கள் உறவினர்கள், பிள்ளைகளுக்குக் கொடுத்துக் கொண்டு தங்கள் தேவைகளையே பூர்த்தி செய்து கொள்கின்றார்கள். ஆனால், அவர்களுக்கு வாக்களித்த மக்கள் அன்றாடம் வாழ வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். எமது மக்களைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் சுகபோக வாழ்க்கை வாழ்வதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. மிக விரைவில் காலம் இவர்களுக்கான பதிலை வழங்கும். மிக விரைவில் அரசியல் ரீதியில் எமது மக்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றோம் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்