புரிந்துணர்வில்லாமல் நாடு சீரழிந்து ஒற்றுமையில்லா நிலை உருவாகியுள்ளது : புதிதாக பல கதைகளை முடுக்கிவிட்டுள்ளார்கள் : பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா

வாகன நெரிசலை குறைக்கவும், விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளை இலகுபடுத்தவும் விவசாய பிரதேசங்களில் உள்ள பல வீதிகளை அபிவிருத்தி செய்து வருகிறேன். அதில் யாருக்காவது தெளிவில்லாமல் பிரச்சினைகள் இருந்தால் பேசிக்கொள்ளலாம். இதற்காக எந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ள நான் தயாராக உள்ளேன். புரிந்துணர்வில்லாமல் நாடு சீரழிந்து ஒற்றுமையில்லா நிலை உருவாகியுள்ளது. புதிதாக பல கதைகளை முடுக்கிவிட்டுள்ளார்கள் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய காங்கிரஸின் தலைவருமான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

வறுமை ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டம் தொடர்பான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல், பிரதேச அபிவிருத்தி மற்றும் பிரதேச முரண்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் திங்கட்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய நிர்வாக சேவை அதிகாரிகள் பிராந்திய மக்கள் பிரதிநிதிகள், மத ஸ்தலங்கள், பொது அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவது தேவையாக உள்ளது. நான் அரசாங்கத்தின் பங்காளி கட்சிக்காரன் என்றவகையில் ஒற்றுமையாக இருந்து பிரச்சினைகளை தீர்க்க முயல்கிறேன். எமது பிரதேசங்களின் நலனில் எப்போதும் பக்கபலமாக இருப்பேன். மக்களுக்கு சேவையாற்ற எனக்கு அமைச்சுக்கள் தேவை என்பதை விட மக்கள் பிரச்சினைகள் தீரவேண்டும் என்பதே இலக்காக உள்ளது. அபிவிருத்திகள் என்பது எதிர்கால சந்ததிகளை மனதில் கொண்டு செய்யப்பட வேண்டும். கிழக்கின் அபிவிருத்தியில் எப்படி நான் முழுமூச்சாக இருந்தேனோ அதேபோன்று சாய்ந்தமருதின் அபிவிருத்தியிலும் நான் எப்போதும் கரிசனையுடன் இருந்துள்ளேன். அபிவிருத்தி திட்டங்களின் போது இயற்கைக்கு பங்கம் வராதவிதமாக திட்டங்களை முன்வைக்க வேண்டும். கடந்த சுனாமியில் நாங்கள் கடும் பேரழிவை சந்திக்க காரணம் திட்டமிடாத குடியிருப்புக்களே. எதிர்கால சந்ததிகளுக்காக இயறகை வளங்கள் பாதுகாப்பட வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் செயலாளர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்க தலைவர், உட்பட பலர் கலந்து கொண்டு வறுமை ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார அபிவிருத்தி, பொது உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி ஆகிய கருத்திட்டங்களை மையமாக கொண்டு இதன்போது  ஆராய்ந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.