அக்கறைப்பற்று கல்வி வலயம் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் முதலிடம் : மேலும் சாதிக்க வாழ்த்துகிறேன் – சுதந்திர கட்சி அமைப்பாளர் வஹாப் !

2020 ம் ஆண்டின் க.பொ.த சாதாரண தர பரீட்சை (2021) பெறுபேறுகளின் தரவரிசைகளின் அடிப்படையில் அக்கறைப்பற்று கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் முதல் இடத்தினை பெற்றுக் கொண்டுள்ள அதே வேளை தேசிய மட்டத்தில் ஒன்பதாவது இடத்தினையும் பெற்று அக்கரைப்பற்று கல்வி வலய அடைவு உயர் நிலையில் உள்ளமை விஷேடமாக பாராட்டப்பட வேண்டிய விடயமாகும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் ஐ. எச்.அப்துல் வஹாப் விடுத்துள்ள பாராட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கிழக்கு மாகாணத்தில் அடுத்த இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் இடங்களை முறையே அம்பாறை (தேசிய மட்டத்தில் -23), திருக்கோவில் (தேசிய மட்டத்தில் -25), மகாஓயா (தேசிய மட்டத்தில் -26), கல்முனை (தேசிய மட்டத்தில் -29) ஆகியன தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த பட்டியலில் சம்மாந்துறை கல்வி வலயம் பத்தாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளதுடன் தேசிய ரீதியாக 78 வது இடத்தை பிடித்துள்ளது. இச் சாதனையில் பங்கேற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், பாட இணைப்பாளர்கள், பகுதித் தலைவர்கள், உதவி அதிபர்கள், பிரதி அதிபர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், இணைப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்ட கல்வி பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர், பெற்றோர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், வளவாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், கல்வித் துறை ஆலோசகர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் அனைவருக்கும் பிரார்த்தனைகளுடன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இக்கட்டான அசாதாரண சூழ்நிலையில் கல்வியை கொண்டு எமது பிரதேசத்தை கௌரவித்த மாணவர்கள் எதிர்காலத்தில் இந்த நாட்டின் சிறந்த தலைவர்களாக வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சகல வளமும் மிக்க எமது தாய்நாட்டின் சிறந்த கல்வியாளர்களாக உருவாகி நாட்டின் நாமத்தை சர்வதேச அளவில் தலைநிமிரச் செய்ய இந்த மாணவர்களின் கல்வி வளமானதாக அமைய பிராத்திப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்