தொழில் முனைவோர் மற்றும் சுய தொழில் துறையை ஊக்குவிக்கும் முகமாக கண்டியில் உபகரணங்கள் வழங்கிவைப்பு.

(க.கிஷாந்தன்)

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் “புலமை சார்ந்த தொழில்துறை” என்ற நோக்கின் அடிப்படையில் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் மற்றும் பிரஜா சக்தி அபிவிருத்தி செயல் திட்டத்தின் மூலமாக  தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் ஊடாக பயிற்சிகளைப் பெற்ற தொழில் முனைவோர் மற்றும் சுய தொழில் துறையை சார்ந்தவர்களுக்கு அவர்களின் தொழில்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் 15 மில்லியன் பெறுமதியான உபகரணங்கள் “சௌமிய விடியல்” எனும் விஷேட  வேலைத்திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கண்டி மாவட்டத்தில் இவ்வாறான தொழில்முனைவோருக்கு பெறுமதியான உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் பிரஜா சக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி, சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் அபிவிருத்தி பணிப்பாளர் தியாகு, அம் மன்றத்தின் நிர்வாகப் பணிப்பாளர் சக்திவேல் மற்றும்  அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த பாரத் அருள்சாமி,

எமது இராஜாங்க அமைச்சரின் கொள்கைக் அமைவாகவும், ஜனாதிபதியின் கொள்கைக்கு அமைவாகவும் மலையகத்தில் புலமை சார்ந்த தொழில்துறையை ஊக்குவிப்பதும் தொழில் முனைவோர் மற்றும் சுய தொழில் துறையை ஊக்குவிப்பது என்பவை முன்னிலை படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாம் இந்த உபகரணங்களை அவர்களின் தொழில்துறையை அபிவிருத்தி செய்ய  வழங்கியுள்ளோம். மேலும் பிரஜா சக்தி அபிவிருத்தி செயல் திட்டத்தின் ஊடாக மேலும் ஒரு திறன் சார் தொழில் துறையை உருவாக்க நாம் பல திட்டங்களை வகுத்து செயற்படுத்தி வருகின்றோம்.

மேலும் நான் அமைச்சரிடம் வேண்டுகோள் மேற்கொண்டதன் விளைவாக எதிர்வரும் ஜனவரி மாதம் அட்டன் தொண்டமான் தொழில் நுட்பக்கல்லூரி போன்று கண்டி மாவட்டத்திலும் தொண்டமான் தொழில்நுட்பக்கல்லூரியை நாம் நிச்சயம் நிறுவுவோம். இதன் மூலமாக பாடசாலை இடைவிலகல் உயர்கல்வி மேற்கொள்ள உள்ள தடைகள் போன்ற பல சவால்களை எம் மாணவர்களால் தகர்க்க முடியும். அதுமட்டுமல்லாது ஒரு திறன் சார் தொழில் துறையை தேர்ந்தெடுக்க அவர்களை எம்மால் தயார்படுத்த முடியும்.

கண்டி மாவட்டத்தில் வளர்ந்து வரும் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தொழிலை மாத்திரம்  எதிர்பார்க்காது அவர்களையும் தொழில்முனைவோர்கள் ஆகவும் சுய தொழில் துறையில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் மாற்றுவதே எமது நோக்கம் அதற்கான ஆரம்பமே இந்நிகழ்வு, உங்கள் சார்பாக மாண்புமிகு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் நீங்களும் உங்கள் தொழில் துறையில் அபிவிருத்தி அடைந்து சமூகத்திற்கும் நாட்டிற்கும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு பங்களிப்பு செய்வீர்கள் என உறுதியாக நம்புகிறேன் என்று பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

இலத்திரனியல் துறை ஆடை துறை மரவேலைப்பாடுகள் ஆட்டோமொபைல் துறை தையல் துறை என பல துறைகளை சார்ந்தவர்களுக்கு உபகரணங்கள்  வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வு பன்வில கெல்லாபோக்க மற்றும் புசல்லாவை மெல்ப்ர்ட் பிரஜாசக்தி நிலையங்களில் நடைபெற்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.