சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; கொள்கலன்களை சேகரித்து ஒப்படைக்குமாறு வேண்டுகோள்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பிரதேசத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு, கல்முனை மாநகர சபையின் ஒத்துழைப்புடன் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் முஹம்மட் நியாஸ் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் நெறிப்படுத்தலில் கடந்த சில நாட்களாக இந்நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது சாய்ந்தமருது பிரதேசத்தின் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவு ரீதியாக சுற்றுச் சூழலில் வீசப்பட்டு, காணப்படுகின்ற யோகட், ஐஸ் கிரீம் மற்றும் தயிர் டப்பாக்கள், சிரட்டைகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள் உள்ளிட்ட கொள்கலன்கள் மற்றும் கழிவுகள் யாவும் மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை வாகனங்களில் சேகரித்து அகற்றப்பட்டு வருகின்றன.

அத்துடன் பராமரிப்பின்றிக் கிடக்கும் வெற்றுக்காணிகள், கிணறுகள், நீர்த்தாங்கிகள் மற்றும்
உள்ளிட்ட டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பொது மக்கள் தமது சுற்றுச்சூழலில் காணப்படும் நீர் தேங்கும் பொருட்களை சேகரித்து வைத்து, டெங்கு ஒழிப்பு படையணி வரும்போது ஒப்படைக்குமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்