திருகோணமலை நகரிலுள்ள விடுதியொன்றின் அறையிலிருந்து நஞ்சருந்திய நிலையில் இரு யுவதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து குழந்தையொன்றும் மீட்பு.

திருகோணமலை நகரிலுள்ள விடுதியொன்றின் அறையிலிருந்து நஞ்சருந்திய நிலையில் இரு யுவதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து குழந்தையொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இரவு (10) நடந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் குறித்த யுவதிகள் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் – ஆறுமுகத்தான் குடியிருப்பை சேர்ந்த (19 வயது) யுவதியும் மாவடிச்சேனை – கரடியனாறு பகுதியை சேர்ந்த (29 வயது) இளம் குடும்ப பெண்ணுமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 29 வயதான பெண்ணின் இரண்டரை வயது குழந்தை சம்பவம் நடந்த இடத்திலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்:
இரண்டு இளம்பெண்களும் கடந்த 6ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளதையடுத்து அவர்கள் வீடு திரும்பாத நிலையில் கடந்த 8ஆம் திகதி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் குடும்பப் பெண்ணின் கணவனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் யுவதிகள் இருவரும் கடந்த 9ஆம் திகதி திருகோணமலை நகருக்கு வந்துள்ளதுடன் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (10)  அவர்கள் தங்கியிருந்த விடுதி அறையில் நீண்ட நேரமாக பாடல் ஒலித்தபடி இருந்துள்ளது.
பின்னர் குழந்தையும் நீண்ட நேரமாக தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த விடுதி உரிமையாளர்  பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சோதனையிட்ட போது யுவதிகள் இருவரும் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் மதுபானத்துடன் நஞ்சு கலந்து அருந்தியதாக கூறப்படும் நிலையில் உடனடியாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அறிந்து திருகோணமலைக்கு வந்த கரடியனாறு குடும்ப பெண்ணின் கணவனிடம் அவரது குழந்தை கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், நஞ்சருந்திய இரு பெண்களும் மிக நெருக்கமாக பழகியதாகவும்  இந்த நட்பினால் தமது குடும்பத்திற்குள் முரண்பாடு தோன்றியிருந்ததாகவும் குடும்பப் பெண்ணின் கணவன் பொலிஸாரிடம் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும்  19 வயது யுவதியும்  தமது மனைவியும் இரவு நீண்டநேரமாக கையடக்க தொலைபேசியில் குறுஞ்செய்தி பரிமாறிக் கொண்டிருப்பதாகவும்  இதை நிறுத்தும்படி பலமுறை கூறியும், மனைவி நிறுத்தாததால்  அவரது கையடக்க தொலைபேசியை ஒருமுறை உடைத்திருந்ததாகவும் கணவன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்