நோர்வே மற்றும் நெதர்லாந்து தூதுவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்… மாநகர முதல்வர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரைச் சந்தித்தனர்…

நோர்வே மற்றும் நெதர்லாந்து தூதுவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதுடன் இன்று பல்வேறு சந்திப்புகளையும் மேற்கொண்டனர். மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் செய்து மாநகரசபை முதல்வருடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய சந்திப்பில் நோர்வே நாட்டு தூதுவர் டிரின் ஜொரான்லி எஸ்கெடல் நெதர்லாந்து நாட்டு தூதுவர் டஞ்ஜா கொங்கிரிஜ்ப் ஆகியோரின் குழுவினர் இச்சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதாக மாநகரசபை முதல்வர் தெரிவித்தார். மேலும், இந்த நாட்டில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தூதுவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துடன், மட்டக்களப்பு மாநகரசபையினால் இரண்டு திட்டங்களும் தூதுவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலனும் கலந்துகொண்டிருந்தார். இச்சந்திப்பினை தொடர்ந்து நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த தூதுவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரனையும் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் மாவட்டத்தின் தேவைப்பாடுகள் குறித்து தூதுவர்கள் கேட்டறிந்துகொண்டனர். அத்தோடு, யுத்ததிற்கு பின்னரான வாழ்வாதார கட்டமைப்புகள் மற்றும் இனங்களிடையேயான உறவுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்