மாநகரசபையூடாக இரண்டு திட்டங்கள் உயர்ஸ்தானிகர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன… (மட்டக்களப்பு மாநகர முதல்வர் – தி.சரவணபவன்)

மாநகரசபையூடாக இரண்டு திட்டங்கள் தூதுவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டன. நெலதர்லாந்து தூதுவரிடம் ஆற்றினை ஆளப்படுத்தவதற்கான இயந்திர விடயமும், நோர்வே சிநேக பாலமொன்று காந்திப்பூங்காவில் இருந்து பொதுச்சந்தைக்குச் செல்லும் வகையிலான பாலமொன்றுக்கான திட்டமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற நோர்வே மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர்களுடனான சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் தெரிவிக்கையில்,

இன்று வருகை தந்த நோர்வே மற்றும் நெதர்லாந்து தூதுவர்களிடம் மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் சம்மந்தமாகவும், அரசியல் ரீதியில் மாநகரசபையின் அபிவிருத்திச் செயற்பாடுகள் எவ்வாறு தடைப்படுகின்றது என்பது தொடர்பிலும் கலந்துரையாடினோம்.

அத்துடன் மாநகரசபையூடாக இரண்டு திட்டங்கள் தூதுவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டன. நெலதர்லாந்து தூதுவரிடம் ஆற்றினை ஆளப்படுத்தவதற்கான இயந்திர விடயமும், நோர்வே சிநேக பாலமொன்று காந்திப்பூங்காவில் இருந்து பொதுச்சந்தைக்குச் செல்லும் வகையிலான பாலமொன்றுக்கான திட்டமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நாங்கள் பல்வேறு தூதுவர்களிடமிருந்து நிதிகள் பெற்றுக் கொடுத்தலும் இங்குள்ள நிருவாகத் திறமையின்மை காரணமாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்திகளைச் செய்து விடக் கூடாது என்ற காரணத்திற்காகவும் எம்மால் கொண்டுவரப்படும் நிதிகள் சரியான முறையில் சரியான நேரத்தில் பயன்படுத்தப்படவில்லை.

இதே போன்று ஜப்பான் தூதுவரின் வருகையின் போது இவ்வாறான திட்டங்களைக் கொடுத்து அதன்மூலம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், பதினொரு மாதங்கள் முடிந்த நிலையில் இன்னும் அந்த வேலை முடிக்கப்படவில்லை. இவ்வாறான நிலைமையே எமது மாநகரசபையில் இருக்கின்றது.

மேலும், அரசியல் ரீதியில் 13வது திருத்தச்சட்ட அமுலாக்கம், மட்டக்களப்பின் பரம்பல் நிலையை மாற்றியமைப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற குடியேற்றத் திட்டங்களான மாதவணை, மயிலத்தமடு, கெவிலியாமடு தற்போது எதிர்வரும் 21ம் திகதி குடியேற்றத் திட்டமிடப்பட்டிருக்கின்ற காரமுனை போன்ற விடயங்கள் தொடர்பிலும் நாங்கள் கலந்துரையாடியிருந்தோம்.

சர்வதேச ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஒரு அழுத்தத்தினைக் கொடுத்து இலங்கையை பேச்சுவார்த்தை மேசைக்கு எடுத்து தமிழர்களுக்குரிய தீர்வைக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்.

அதேநேரம் பொதுமக்களிடம் இருந்து மறைமுக வரி அதிகமாக அறிவிடப்படுகின்றது, முப்பது நாற்பது வீதத்திற்கு அதிகமாக வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமை, இவற்றைக் கட்டப்படுத்தும் தந்திரோபாயங்கள் இந்த அரசாங்கத்திடம் இல்லை, ஆளுங்கட்சியில் இருப்பவர்களும் அதற்குரிய அழுத்தங்களைக் கொடுப்பதில்லை என்பது தொடர்பிலும் பேசப்பட்டது.

மேலும் மட்டக்களப்பின் வளங்கள் பறிபோவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மடடக்களப்பின் மண்வளம் சுரண்டப்படுதல் மற்றும் மக்களின் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடியதாக இருக்கின்ற விடயங்கள் தொடர்பிலும் அவர்களுடன் கலந்துரையாடினோம்.

மேலும் மிக முக்கிய விடயமாக நாங்கள் அரசியற் தீர்வை நோக்கி நகரும் இத்தருவாயில் எமக்கான அரசியற் தீர்வு கிடைப்பதற்கிடையில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற 2020 – 2030ம் ஆண்டு மற்றும் 2050ம் ஆண்டு திட்டங்களை நிறுத்தவிடின் எமக்கான அரசியற் தீர்வு கிடைக்கும் போது இங்கு தமிழர்களுக்கு என்று இடம் இருக்காது. முதலில் அவ்வாறான திட்டங்கள் அமுல்ப்படுத்துவதனை நிறுத்துவதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதோடு, எமது அரசியற்தீர்வுக்கான அழுத்தங்களும் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளோம்.

மிகவும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக இது இருந்தது. எதிர்காலத்தில் மேற்கூறப்பட்ட திட்ட அமுலாக்களின் மூலம் இந்த உறவைத் தொடர முடியும் என நான் நினைக்கின்றேன் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்