ஹரீஸ் எம்பி வெளியிட்ட பகிரங்க அறிவிப்புக்கு மாற்றுத் தீர்வு என்ன ? ராஜினாமா செய்தால் அடுத்த எம்பி யாருக்கு ?

அரசியல் அதிகாரம் என்பது சாத்தியமற்ற விடயங்களையும் சாதிக்க முயல்வதாகும். ஆனால் தலைவர் அஸ்ரபின் மரணத்துக்கு பின்பு கிடைக்கப்பெற்ற அரசியல் அதிகாரத்தைக்கொண்டு எதனை சாதித்தோம் அல்லது சாதிக்க முயன்றோம் என்றால் மக்களுக்கு படம் காட்டியதை தவிர வேறு எதுவிமில்லை.

தேர்தல் மேடைகளில் வாக்காளர்களை கவர்வதற்காக சூடாகவும், உணர்ச்சியாகவும் வீர முழக்கம் பேசிவிட்டு பின்பு பெட்டிப்பாம்பாக அடங்கி மிதவாதம் பேசுகின்றபோதுதான் அதிக விமர்சனங்கள் எழுகின்றது என்பதனை எமது பிரதிநிதிகள் புரிந்துகொள்வதில்லை.

நாடு முழுவதிலும் முஸ்லிம்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளது. குறிப்பாக வடகிழக்கில் காணி பிரச்சினைகளும், அதுபோல் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக தரமுயர்த்தல் பிரச்சினையும் உள்ளது.

இவ்வாறு பிரச்சினைகள் உள்ளது என்று கூறிக்கூறி காலத்தை கடத்துகின்றோமே தவிர, ஏதாவது ஒரு பிரச்சினைக்காவது இதுவரையில் தீர்வினை பெற்றதில்லை.

ரவுப் ஹக்கீமின் தலைமைத்துவ வரலாற்றில் முஸ்லிம் காங்கிரஸ் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அதி உச்சக்கட்ட அதிகாரத்தில் இருந்தது. இதுபோன்றதொரு அதிகாரம் இனிமேல் கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

அதாவது தேசியத்தில் பாரிய நிதி ஒதுக்கீடுகளுடன் முழு அமைச்சர், அரை அமைச்சர்கள், கிழக்குமாகாண முதலமைச்சர் பதவி, கல்முனை தொகுதியை பிரதிநிதுத்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் பதவி அத்துடன் கல்முனை மாநகர சபை அதிகாரம் என்று அதி உச்சக்கட்ட அதிகாரங்களுடன் மு.கா. பிரதிநிதிகள் வலம் வந்தனர்.

மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அன்று தொடக்கம் இன்று வரைக்கும் நெருக்கமான உறவினை கொண்டுள்ளனர். இந்த உறவின் ஆழத்தினை அண்மையில் நடைபெற்ற மன்னார் பிரதேச சபை தவிசாளர் தெரிவின்போது புரிந்துகொண்டோம்.

அதுபோல் கடந்த நல்லாட்சிக் காலத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கோடீஸ்வரன் அவர்கள் ஹரீஸ் எம்பியின் பாடசாலை காலம் தொடக்கம் மிக நெருங்கிய நண்பர்.

இத்தனை அதிகாரங்களும், செல்வாக்குகளும், உறவுகளும் இருந்தும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முற்படாமல் விழாக்களும், மேடைகளும், வாக்குறுதிகளும், மேளதாளங்களும், ஆராத்திகளும், மாலைகளும் என்று காலங்கள் கடந்தது.

ஹரீஸ் எம்பியின் அண்மைய அறிக்கையில் ““நான் பின்பற்றும் அரசியல் வழிமுறைகள்”” என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வாறென்றால் ஒரு கட்சியில் இருந்துகொண்டு ஒவ்வொருவரும் தனித்தனியான வழிமுறைகளை பின்பற்றுகின்றார்களா ? கட்சிக்கென்று பொதுவான கொள்கைகள் இல்லையா ? பொதுவான கொள்கைகள் இருந்தால் முரண்பாடுகள் ஏற்படாமல் இருந்திருக்கும். இது யாருடைய தவறு ?

அத்துடன் ஹரீஸ் எம்பி அவர்கள் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரல்ல. அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால் தேர்தலில் போட்டியிட்டு அடுத்த பட்டியலில் உள்ளவர் அந்த பதவியை அடைய முடியுமே தவிர, ஹரீஸ் எம்பியோ அல்லது மார்க்க அறிஞர்களோ, புத்திஜீவிகளோ நினைக்கின்ற எவருக்கும் வழங்க முடியாது.

எனவே மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டு தொடர்ந்து உசுப்பேத்தும் வழிமுறைகளை கைவிட்டுவிட்டு கல்முனை பிரச்சினையை தீர்ப்பதற்கு த.தே. கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

வடகிழக்கு இனப்பிரச்சினை தீர்வுக்கு முஸ்லிம்களின் சம்மதம் மிக முக்கியமானது. அதாவது முஸ்லிம்களின் இணக்கப்பாடின்றி தமிழர்கள் தங்களது இலக்கை அடைவது கடினம். அதனால் இந்த துரும்பை பயன்படுத்தி தமிழ் தரப்புக்கு பல நிபந்தனைகளை முன்வைத்து அதில் முதன்மையானதாக கல்முனை பிரச்சினையை முன்னிறுத்தி நிரந்தர தீர்வினை காண்பதற்கு முன்வர வேண்டும்.

அவ்வாறில்லாமல் கல்முனையை பாதுகாப்பதென்று கூறிக்கொண்டு “ஜானசார தேரர்” உட்பட எவர் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு முட்டுக்கொடுக்க வேண்டி ஏற்படும். பேரினவாதம் இதனை எங்களது பலயீனமாக கருதி எங்களை அடிமையாக கையாள்வதற்கு கல்முனை பிரச்சினையை பயன்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே ஊடகங்களிலும், மேடைகளிலும் வீர வசனங்களை தொடர்ந்து பேசுவதைவிட மூடிய அறைக்குள் தலைவர் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து இதய சுத்தியடன் த.தே கூட்டமைப்புக்கு அழுத்தம் வழங்க வேண்டும். முடியாவிட்டால் ரவுப் ஹகீம், ஹரீஸ் உட்பட அனைவரும் அரசியலைவிட்டு வெளியேற வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.