முல்லைக் கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகுகளின் அடாவடிச் செயற்பாடு; உரிய தரப்பினர் தூக்கமா?கேள்வி எழுப்புகின்றார் – ரவிகரன்.

முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய அடாவடிச் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்தவேண்டிய கடற்றொழில் அமைச்சர், கடற்படையினர் மற்றும், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் ஆகிய தரப்புக்கள் தூக்கத்தில் இருக்கின்றார்களா என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைகின்ற இந்திய இழுவைப் படகுகள் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடுவதுடன், முல்லைத்தீவு மீனவர்கள் பலரதும் பல இலட்சக்கணக்கான மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்திவருகின்றன.

இந் நிலையில்  12.10.2021 இன்றையநாள், இந்திய இழுவைப் படகுகளால், பல இலட்சம் பெறுமதியான மீன்பிடி வலைகளை இழந்துள்ள முல்லைத்தீவு மீனவர்களை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று சந்தித்ததுடன், நிலைமைகளையும் கேட்டறிந்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மீனவர்களுடைய வாழ்வாதாரத்தில் பல தரப்புக்களும் கைவைக்கின்ற நிலையைத் தற்போது பார்க்க முடிகின்றது.

குறிப்பாக தென்னிலங்கை மீனவர்களால் முல்லைத்தீவுக் கடற்பரப்பிலே தடைசெய்யப்பட்ட சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், வெடிவைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந் நிலையில் தற்போது இந்திய இழுவைப்படகுகளாலும் முல்லைத்தீவு மீனவர்களின் வழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.

குறிப்பாக இம்மாதம் 10,11,12 ஆகிய தினங்களில் முல்லைத்தீவு மீனவர்களுடைய வலைகளை இந்திய இழுவைப் படகுகள் சேதமாக்கியுள்ளன.

எமது முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பல படகுகள், வலைகள் சேதமாக்கப்பட்ட நிலையில் கரையே வந்துள்ளன. இப்படியான நிலையிலே மறுநாள் தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் எமது மீனவர்கள் பலரும் அல்லலுறுகின்றனர்.

இவ்வாறாக அத்துமீறி முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் வருகைதரும் இந்திய இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டியது யார்?

இந்த விடயத்திலே கடற்றொழில் அமைச்சர், கடற்படை, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் ஆகியோர் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்? எனக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

இது தொடர்பிலே உரிய தரப்பினர் இதுவரையில் எடுத்த நடவடிக்கை என்ன? எவ்வித நடவடிக்கைகளையும் உரியவர்கள் மேற்கொள்ளவில்லை.

இப்படியான சூழலில் எமது மீனவர்கள்என்னசெய்வது? இது தொடர்பிலே யாரிடம் முறையிடுவது எனத் தெரியாமல் தவிக்கின்றார்கள்.

இலங்கை நாட்டின் பிரஜைகளான முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தில் நலிவினை ஏற்படுத்தும் செயற்பாட்டை கடற்றொழில் அமைச்சர், இலங்கை கடற்படை, கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் ஆகிய தரப்புக்கள் மேற்கொள்கின்றன.

இந்தியன் இழுவைப்படகுகளால் எமது மீனவர்களின் பல இலட்சக்கணக்கான மீன்பிடி உபகரணங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. பலத்த கடன் நிலைமைகளுக்கு மத்தியில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் எமது மீனவர்கள், அந்த மீன்பிடி உபகரணங்களை மீண்டும் வாங்குவதற்கு அவர்கள் எங்கே செல்வார்கள்?

ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தியன் இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகையினைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலே  ஒரு சட்டமூலத்தினைப் பாராளுமன்றிலே நிறைவேற்றியிருக்கின்றார்.

அந்தச் சட்டமூலத்தினை அமுல்ப்படுத்தவேண்டியது யார்? தற்போது கடற்றொழிலுக்குப் பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர் குறித்த சட்டமூலத்தினை அமுல்படுத்துவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

எமது மீனவ மக்களின் வாழ்வாதாரத்தினை உறுதிப்படுத்தவேண்டும். எனவே இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் வருவதனை தடுக்கவேண்டும்.

உரியதரப்பினர் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்