கௌரவ பிரதமரின் தலைமையில் அலரி மாளிகையில் நவராத்திரி விழா

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நவராத்திரி விழா அலரி மாளிகையில் நேற்று (12) இரவு இடம்பெற்றது.

நவராத்திரி விழாவில் இந்திய மத்திய அரசின் மாநிலங்களவை உறுப்பினர் கௌரவ சுப்பிரமணியம் சுவாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டமை விசேடம்சமாகும்.

கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நவராத்திரி பூஜை வழிபாடு பிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் ராமசந்திர குருக்கள் பாபு சர்மா, மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தின் பிரதான குருக்கள் துரைசாமி உதயராகவ குருக்கள் மற்றும் அருண் பிரசாந்தன் சர்மா குருக்கள் ஆகியோரினால் நடத்தப்பட்டது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடந்த ஆண்டை போன்றே இவ்வாண்டும் நவராத்திரி விழாவினை அலரி மாளிகையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்துக்கள் அனைவரும் தாயாகப் போற்றுகின்ற சக்தியைப் போற்றி வழிபடும் நிகழ்வே நவராத்திரி விழாவாக ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி விரதம் பார்ப்பதற்கு ஒரு கொண்டாட்டம் போல இருந்தாலும் ஒரு விரதமாகவே அனுட்டிக்கப்படுகிறது. அழிவு இல்லாத சிறந்த கல்விச் செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும் மனத்திடத்தோடு துணிவைத்தரும் மலைமகளையும் செல்வங்களை அள்ளித்தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு.

ஒன்பது தினங்களின் பின்னர் பத்தாவது நாளான விஜயதசமி இந்து மக்களுக்கு மிகவும் விசேடமான தினமாகும்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அலரி மாளிகையில் நடைபெற்ற நவராத்திரி விழாவை மேலும் வர்ணமயமாக்கியது.

குறித்த நிகழ்வில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ, கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி சுரேன் ராகவன், மருதபாண்டி ரமேஷ்வரன், பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், முன்னாள் பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பிரதமர் அலுவலகத்தின் பணிக்குழாம் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.