மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற, நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமி விழாவின் போது.

விஜயதசமி புரட்டாசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திதியின் தசமி நாளன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் காலண்டரின்படி இந்த ஆண்டு அக்டோபர் 15ம் நாள் கொண்டாடப்படுகிறது.

நவரத்திரி விழா அக்டோபர் 7ம் தேதி தொடங்கி அக்டோபர் 14 ஆம் திகதி நேற்று ஆயுத பூஜை எனும் சரஸ்வதி பூஜை மற்றும் 15ம் திகதியான இன்று விஜயதசமி கொண்டாடப்பட்டு நவராத்திரி கொண்டாட்டம் முடிவடைகிறது.

விஜயதசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று அர்த்தம். நவராத்திரியின் போதுதான் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாளில் நவமியில் மகிஷாசுரனை வதம் செய்தாள். பத்தாவது நாள் விஜய தசமி. விஜயம் என்றாலே வெற்றி! தீயவை அழிந்து நன்மை பெருகும். நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

நவராத்திரிப் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் தொழில்களையும், கல்வியையும், கலைகளையும் போற்றும் விதமாகவும், அதற்கடுத்த நாள் விஜயதசமி என்று வெற்றித் திருநாளாகவும் உலகெங்கும் உள்ள இந்துக்கள் மிகத் தொன்மைக் காலம் தொட்டுக் கொண்டாடி வருகின்றார்கள்.

இத் திருநாளில் (வித்தியாரம்பம் செய்தல்) ஏடு தொடங்குதல், புதிய வியாபார நிலையம் ஆரம்பித்தல், புதிய தொழில் ஸ்தபனங்கள் ஆரம்பித்தல் போன்றன ஆரபிப்பதால் வெற்றியும் புகழும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நவராத்திரியின் ஒன்பது நாளும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும்,பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று ஸ்ரீ அன்னை விஜயம் செய்யும் நாளே ’விஜயதசமி’ என்றும் கூறப்படுகிறது. அன்று ஸ்ரீ அன்னையே நம் இல்லம் தேடி வருகிறாள் என்பதே இந்நாளின் மிகப் பெரிய சிறப்பு.
எருமை தலை கொண்ட மகிஷாசூரணை வதம் செய்ய, ஒன்பது நாள் கடும் தவம் செய்து, மகிஷியை கொன்று கொற்றவையாக அம்பிகை திகழ்கின்றாள்.
மகிஷனின் தலையை கொய்து விஜயையாக அம்பிகை நின்ற திருநாளை விஜய தசமி என கொண்டாடப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.