மீண்டும் டெங்கு அபாயம்

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இம்மாதம் கடந்த 26 நாட்களில் 2,228 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் இதில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த மாதம் கொழும்பு மாவட்டத்தில் 856 பேரும், கம்பஹாவில் 476 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 209 பேரும் டெங்கு நோயாளர்களாகப் பதிவாகியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையின் டெங்கு மற்றும் டெங்கு இரத்தப்போக்கு முகாமைத்துவ விசேட வார்டுகளிலுள்ள 21 படுக்கைகளும் தற்போது நோயாளர்களால் நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவர் ஷிரந்தி செனவிரத்ன தெரிவிக்கின்றார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வீடுகள் மற்றும் வளாகங்களில் சோதனைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நுளம்புகள் பெருகும் இடங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்