அரசின் பங்காளி கட்சிகளுக்குள் எழுந்துள்ள சலசலப்புகளினால் அரசாங்கம் கழிந்துவிடும் என்று நினைக்க கூடாது : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
நீண்டகாலமாக இழுபறியில் இருந்துவரும் ஒலுவில் துறைமுக விவகாரம் தொடர்பில் ஆராய ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா புதன்கிழமை (27) கல்முனையில் அமைந்துள்ள மாவட்ட கடற்தொழில் காரியாலயத்தில் மீனவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஒலுவில் துறைமுக வளாகத்தையும் பார்வையிட்டார். அதன்போது துறைமுக குளிர்சாதன வசதிகள் மேம்பாடு, மீன் சந்தைப்படுத்தல் வசதிகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
இந்த விஜயத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி, பிரதமர் எள்ளென்றால் நான் எண்ணெயாக இருந்து அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன். கடந்த தேர்தல் காலங்களில் இந்த அரசின் தலைவர்களினால் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளை என்னால் முடிந்தவரை நிறைவேற்ற தயாராக உள்ளேன். இந்த ஒலுவில் துறைமுக விவகாரம் தொடர்பில் பலரும் கரிசனை கொண்டு என்னிடமும், ஜனாதிபதி கோத்தாபய, பிரதமர் மஹிந்தவுடனும் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்கள். இந்த ஒலுவில் துறைமுக விவகாரம் தொடர்பில் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா எம்.பியும் கரிசனைகொண்டு என்னிடமும், ஜனாதிபதி கோத்தாபய, பிரதமர் மஹிந்தவுடனும் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
மீனவர்கள் இன்று என்னை சந்தித்து முன்வைத்த நீண்டகால பிரச்சினைகளை நான் கூடிய விரைவில் தீர்த்து வைக்க தயாராக உள்ளேன். மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து யாருக்கும் பயப்பட தேவையில்லை. மீனவர்களுக்கு தேவையாக உள்ள ஒலுவில் துறைமுகம் யாருக்கும், எப்பகுதியினருக்கும் பாதில்லாத வகையில் சகலருடனும் கலந்துரையாடி எவ்வித பிரச்சினைகளுமின்றி பேசி முடிக்கப்பட்டு விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் பங்காளி கட்சிகளுக்குள் எழுந்துள்ள சலசலப்புகள் உலக அரசியலில் வழமையானது. இதனால் அரசாங்கம் கழிந்துவிடும் என்று நினைக்க கூடாது என்றார்.
இந்நிகழ்வுகளில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், அட்டாளைசேனை பிரதேச செயலாளர், கடற்தொழில் திணைக்கள பயிற்சி மற்றும் விசாரணைப்பிரிவின் பணிப்பாளர் எம்.ஜி. என். ஜெயக்கொடி, கடற்தொழில் திணைக்கள மாவட்ட உதவிப்பணிப்பாளர் நடராஜா ஸ்ரீரஞ்சன், முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, பொலிஸார், கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள், இலங்கை கடற்படை அதிகாரிகள், கடற்தொழில் திணைக்கள உயரதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், மீனவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். ,



கருத்துக்களேதுமில்லை